Sunaina Missing: காணாமல் போன நடிகை சுனைனா.. தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸ்...! உண்மையில் நடந்தது என்ன?
இரண்டு நாட்களாக நடிகை சுனைனா காணவில்லை என சோசியல் மீடியாவில் பரவி வந்த வீடியோவால் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை சுனைனா தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் பெற்றார். 2008ம் ஆண்டு நடிகர் நகுல் ஜோடியாக 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து மாசிலாமணி, சில்லு கருப்பட்டி, லத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது டொமின் டிசில்வா இயக்கத்தில் 'ரெஜினா' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
வைரலான வீடியோ :
மிகவும் மும்மரமாக படத்தின் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கும் இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக சுனைனாவை காணவில்லை என்ற தகவல் சோசியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டது. அவரின் செல்போன் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதால் இது கடத்தலாக இருக்குமோ? என்ற சந்தேகத்துடன் வீடியோ ஒன்று மிகவும் வைரலாக இணையத்தில் பகிரப்பட்டது.
சுனைனா காணவில்லை :
கடந்த 6 நாட்களுக்கு முன்னர் சுனைனா, சென்னை சேப்பாக்கத்தில் ஐ.பி.எல் போட்டியை காண சென்ற வீடியோவை ட்விட்டரில் போஸ்ட் செய்துள்ளார். அதற்கு பிறகு அவரின் பதிவு எதுவும் போஸ்ட் செய்யப்படவில்லை. அவர் காணவில்லை என்ற வீடியோ மட்டுமே வைரலானது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அந்த வீடியோவால் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அவர் கடைசியாக சென்ற நுங்கம்பாக்கம், எழும்பூர், விருகம்பாக்கம், கோயம்பேடு போன்ற இடங்களிலும் அவர் முன்னர் தங்கியிருந்த வீட்டிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பட தயாரிப்பு நிறுவனங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு நாட்களாக சுனைனாவை தீவிரமாக போலீசார் தேடி வந்த நிலையில், அவர் காணவில்லை என வெளியான அந்த பரபரப்பு வீடியோ ரெஜினா படத்தின் விளம்பரத்திற்காக என்பது தெரிய வந்துள்ளது.
ரெஸ்க்யூ சுனைனா :
சமீப காலமாக காணவில்லை, கண்ணீர் அஞ்சலி என விதவிதமாக படத்தின் விளம்பரத்திற்காக ஏதேதோ யுக்திகளை திரைத்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு நடிகையை காணவில்லை என வீடியோ வெளியிட்டு உண்மை சம்பவம் போலவே இணையத்தில் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியது கொஞ்சம் அதிகம் தான் என கொந்தளித்து வருகிறார்கள் நெட்டிசன்கள். ரசிகர்களும் அவர் உண்மையிலேயே காணாமல் போனதாக எண்ணி ரெஸ்க்யூ சுனைனா என ஹேஷ் டேக் மூலம் இந்த வீடியோவை ட்ரெண்டிங் செய்ததால் போலீசும் இதில் தீவிரமாக இறங்கி விசாரணை மேற்கொள்ள துவங்கிவிட்டனர். இந்த செய்தி திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.