‛சமஸ்கிருதத்துக்கு நான் எதிரி இல்ல... தமிழுக்கு இடம் கொடுங்க’ - 35 ஆண்டுகளுக்கு முன் மேடை ஏறி எதிர்த்த சுஹாசினி!
‛மன்னிக்கனும்... உங்க வார்த்தைகளை நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன்... பெரியவங்க நீங்க... நீங்களெல்லாம் இப்படி பேசலாமா சார்...’
‛இந்தி ஒரு நல்ல மொழி, இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். தமிழர்களும் நல்லவர்கள்; எனக்கு எவ்வளவு மொழிகள் தெரிகிறதோ, அவ்வளவு சந்தோஷம்’ என, நடிகையும், இயக்குனர் மணிரத்தினம் மனைவியுமான சுஹாசினி தெரிவித்த கருத்து, தற்போது சமூக வலைதலங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சமீபமாகவே தமிழ்-இந்தி சண்டை உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. காரணம், சினிமாக்காரர்கள் இதில் களமிறங்கியுது தான். பிரபலமானவர்கள் முன்னெடுக்கும் பிரச்சனை, அது அவர்களை சார்ந்த ரசிகர்களையும் அந்த சண்டைக்கு இழுக்கிறது. அப்படி ஒரு சண்டை தான், ‛இந்தி-தமிழ்’ எது பெரிது என்கிற சண்டை. நடிகை சுஹாசினியின் கருத்து சமீபத்திய ட்ரெண்ட் என்றாலும், அவர் 35 ஆண்டுகளுக்கு முன், தமிழுக்காக மேடை ஏறி சண்டையிட்டது தெரியுமா? பாலசந்தர் இயக்கத்தில் பெரிய மெகா ஹிட் படமாக அமைந்த, சிந்து பைரவி திரைப்படத்தில், ஜேகேபி என்கிற கதாபாத்திரத்தில் வரும் சிவக்குமார், கர்நாடக இசைக்கலைஞர்.
அவரது ரசிகையாக சிந்து என்கிற கதாபாத்திரத்தில் வரும் சுஹாசினி, கச்சேரி ஒன்றில், சிவக்குமாரின் மொழி தெரியாத பாடலுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சி ஒன்றும் வரும். அப்போது சிவக்குமார், சுஹாசினி இடையே வரும் உரையாடல் இதோ...
சுஹாசினி: நீங்க ரொம்ப அருமையா பாடுனீங்க... மெய் மறந்து எல்லோரும் அதை கேட்டோம். ஆனால், உங்க இசையை ரசிக்க முடிந்ததே தவிர... அதுல இருந்த அர்த்தத்தை எங்களால தெரிஞ்சுக்க முடியல...
சிவக்குமார்: அதுக்கு என்ன பண்ணலாம்ங்கிறீங்க...?
சுஹாசினி: எந்த கலை வடிவமும் மக்களுக்கு போய் சேரணுங்கிறது முக்கியம். அப்படி போய் சேர்வதற்கு, புரியுற மொழியில் இருக்கணும்கிறது முக்கியம் இல்லையா?
சிவக்குமார்: அப்போ நான் தெலுங்கு கீர்த்தனையே பாடக்கூடாதுனு சொல்றீங்களா....?
சுஹாசினி: அய்யய்யோ... தெலுங்கு கிர்த்தனைகளுக்கோ... சமஸ்கிருத பாடல்களுக்கோ நான் எதிரி இல்ல... சத்தியமா இல்ல... நடுவுல கொஞ்சம் தமிழ் பாடல்களுக்கும் இடம் கொடுக்கணும்னு கேட்டுக்கிறேன். மக்கள் மத்தியில் தமிழ் இசையையும் நீங்கள் பழக்கப்படுத்துனுங்கிறது தான் என்னோட விருப்பம்!
சிவக்குமார்: அப்போ... இந்த ரசிகர் சபையில்... நாட்டு பாடலை பாடச்சொல்றீங்களா... சங்கீத மேடையை சாக்கடையா மாத்தச் சொல்றீங்களா...
சுஹாசினி: மன்னிக்கனும்... உங்க வார்த்தைகளை நான் கடுமையா ஆட்சேபிக்கிறேன்... பெரியவங்க நீங்க... நீங்களெல்லாம் இப்படி பேசலாமா சார்...
(மேடைக்கு கீழே இருப்பவர்கள் சுஹாசினிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை கீழே இறங்கக் கூறுகின்றனர்: எதிர்பாளர்களை சிவக்குமார் சமரசம் செய்கிறார்)
சுஹாசினி: நாட்டு பாடல்கள்னா எப்படி என்ன சார் கேவலம்... அத்தனை நையாண்டி. அந்த பாடல்களில் இல்லாத உணர்ச்சியா, சொல்லப்படாத கருத்துக்களா? நாட்டுப்பாடலில் என்ன சார் இல்லை. காதல் இல்லையா... பக்தி இல்லையா... கோபல் இல்லையா... இல்ல... ஹாஸ்யம் இல்லையா. தாலாட்டு, நாட்டுப்பற்று, பறிவு, பிரிவு, பொதுவுடமை... எது சார் இல்லை?
இப்படி, தமிழுக்காக பலரின் எதிர்ப்பை மீறி மேடை ஏறி
, பக்கம் பக்கமாக டயலாக் பேசிய அதே சுஹாசினி, 35 ஆண்டுகளுக்குப் பின், முரணான கருத்தை தெரிவித்துள்ளார். படம் வேறு, நிஜம் வேறு என்பது உண்மை தான். ஆனாலும் சினிமாவில் பேசப்படும் கருத்துக்கள், பெரும்பாலும் அதை பேசுபவரால் ஏற்கப்பட்டதாக கூறப்படுவதால் தான் இந்த சர்சைகள் எழுகிறது.