உழைப்பை உதாசீனப்படுத்தும்போது மனசு வலிக்குது..! சீரியல் நடிகையின் வேதனைப்பதிவு..!
உழைப்பை உதாசீனப்படுத்தும்போது மனம் மிகவும் வலிக்கிறது என்று நடிகை சரண்யாதுருடி வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

சின்னத்திரையின் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் சரண்யா துரடி. இவர் கலைஞர் செய்தியில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து அவர் ராஜ் தொலைக்காட்சியில் பணிக்கு சேர்ந்தார். அங்கு இரு மாதங்களே பணியாற்றிய நிலையில் அவர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.
செய்தி வாசிப்பாளரான அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியது. இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரில் நடித்தார். பின்னர், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரபல சீரியலில் நடித்தார். ஆனால், சில காரணங்களால் சன் தொலைக்காட்சியின் அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இதையடுத்து, ஆயுத எழுத்து என்னும் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. ஆனாலும், அந்த சீரியல் பாதியிலே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து வாய்ப்புகள் அனைத்தும் பாதியிலே நின்று கொண்டிருந்ததால் சில காலம் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். பின்னர், சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வைதேகி காத்திருந்தாள் சீரியலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிட்டியது. அந்த சீரியல் மூலமாக சரண்யா நன்றாக வளர்ந்து கொண்டிருந்த சூழலில், 50 எபிசோடுகளை கடந்த நிலையில் அந்த சீரியலின் நாயகன் பிரஜனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. இதனால், அந்த சீரியலும் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த சூழலில், சரண்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்த கடினமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு எனது நன்றிகள். இப்போது மிகவும் கஷ்டமான காலத்தை சந்தித்து வருகிறேன்.

உழைப்பை உதாசீனப்படுத்தும்போது மனசு மிகவும் வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டு வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அவரது பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், சரண்யா விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகி முழுமையாக ஜீ தொலைக்காட்சிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















