Thalapathy Vijay: விஜய்யுடன் இணைந்து நடிக்க மறுத்த ஷகீலா.. எல்லாத்துக்கும் அதுதான் காரணம்!
விஜய்யுடன் இணைந்து நடிக்கும்படி எந்த காட்சியும் இருக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன். இல்லை என்றால் நான் நடிக்கிறேன் என சொல்லித்தான் ஒப்புக் கொண்டேன்.

அழகிய தமிழ் மகன் படத்தில் நான் விஜய்யுடன் இணைந்து நடிக்க மறுத்ததாக நடிகர் ஷகீலா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு பரதன் இயக்கத்தில் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் வெளியானது. இப்படத்தில் ஸ்ரேயா சரண், நமீதா, சந்தானம், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் முதல்முறையாக விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களும் அவரே செய்ததை ரசிகர்கள் வரவேற்றிருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த அழகிய தமிழ் மகன் படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை ஷகீலா ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் தான் அப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்க மறுத்ததாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “அழகிய தமிழ் மகன் படத்தில் நான் விஜய்யுடன் நடித்திருந்தேன். அந்த படம் வாய்ப்பு வந்தபோது எல்லோரும் என்னிடம் அவர் யாரிடமும் பேசமாட்டார் என சொன்னார்கள். அதனால் நானும் விஜய்யுடன் இணைந்து நடிக்கும்படி எந்த காட்சியும் இருக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன். இல்லை என்றால் நான் நடிக்கிறேன் என சொல்லித்தான் ஒப்புக் கொண்டேன்.
காரணம், விஜய்யுடன் நான் பழகி ரொம்ப நாள் ஆச்சு. அவர் பேசமாட்டார் என சொன்னதும், நாங்கள் நேரில் போய் சந்திக்கும்போது பேசாததற்கு தப்பு யார் மேல என யோசிக்க வேண்டியிருக்கும் என்பதால் அப்படி சொல்லியிருந்தேன்.
அங்கு போய் பார்த்தால் முதல் காட்சியே விஜய்யுடன் தான் இருந்தது. ஆனால் அவர் என்னை பார்த்ததும் ஹாய் ஷகி என சொன்னார். எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. என்ன பதில் சொல்ல வேண்டும் என தெரியவில்லை. அந்த காட்சி இரவு 1.30 மணிக்கு ஷூட் செய்தார்கள். அப்போது சந்தானம் என்னிடம், ‘திருவண்ணாமலை ஜோதிக்கு வர கூட்டத்தை விட உங்க படம் போட்டிருக்கிற பரங்கிமலை ஜோதிக்கு வர கூட்டம் அதிகமுன்னு கருத்து கணிப்பு சொல்லுது’ என சொல்ல வேண்டும்.
அவரும் சொல்லி விட்டார். அப்போது நான் கீழே குனிந்தேன். என்னை பார்த்ததும் விஜய் தவிர 4 பேரும் தெறித்து ஓடினர். எனக்கு என்ன நடக்குன்னே புரியவில்லை. நான் கீழே குனிந்ததற்கு காரணம் பின்னி மில்லில் ஷூட்டிங் நடந்ததால் கொசுக்கடி பயங்கரமாக இருந்தது. கொசுவை அடிக்க குனிந்த என்னை அந்த வசனம் பேசியதற்காக செருப்பை கழட்டி அடிக்கப் போகிறேன் என சந்தானம் உள்ளிட்ட அந்த காட்சியில் விஜய் நண்பர்கள் நினைத்து விட்டார்கள். இதனை சந்தானம் என்னிடம், அக்கா நீங்க செருப்பை எடுத்ததாக நினைத்து விட்டோம் என சொன்னார்” என கூறியுள்ளார்.





















