Samantha: ஷாருக்கான் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை.. ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா சமந்தா?
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் நடிகை சமந்தா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்குமார் ஹிரானி இந்தப் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சமந்தா
தனக்கு மையோசிடிஸ் (தசை அழற்சி பாதிப்பு) இருப்பது கண்டறியப்பட்டதில் இருந்து சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துக்கொண்டு தனது உடல் நலத்தின் மேல் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை சமந்தா. கடுமையான உடற்பயிற்சிகளை செய்வது , உணவு முறைகளை மாற்றுவது என தனது அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளில் சமந்தா ஆன்மிக ரீதியாக தன்னை அதிகம் வழிநடத்தி வருகிறார். இந்தியா முழுவதும் உள்ள ஆன்மிக ஸ்தலங்களுக்கு சுற்றுலா சென்று அந்த அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார். சினிமாவில் இருந்து ஓராண்டு காலம் இடைவெளி எடுத்துக் கொள்வதாக நடிகை சமந்தா தெரிவித்து கிட்டதட்ட ஒரு வருடம் கடந்துள்ளது. தான் அடுத்து நடிக்க வேண்டிய படங்களுக்கான கவனம் செலுத்திவருகிறார் சமந்தா.
சமந்தா நடித்து வரும் படங்கள்
ஹாலிவுட்டில் ரூஸோ பிரதர்ஸ் இயக்கிய சிட்டெடல் வெப் சீரிஸ்சின் இந்திய ரீமேக்கில் சமந்தா நடித்துள்ளார். இந்த தொடரில் வருன் தவான் இணைந்து நடித்துள்ளார். இது தவிர்த்து பங்காரா என்கிற தெலுங்கு படத்தை தயாரித்து நடிக்கவும் இருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி பாலிவுட் நடிகர் ஷாருக் கான் படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு ஷாருக்கான் நடித்த டங்கி படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி இந்தப் படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
டங்கி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. தற்போது இந்த முறை ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஷாருக்கான் நடிக்க இருப்பதாக எதிர்பார்க்கப் படுகிறது. இதில் சமந்தா நாயகியாக நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வமான தகவல் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
SRK & Samantha come together for Rajkumar Hirani's New Action adventure - Patriotic Film.
— Christopher Kanagaraj (@Chrissuccess) June 24, 2024
Expecting Official Announcement on Aug15💥 pic.twitter.com/xn8vcwGA6j
கடந்த ஓராண்டு காலமாக சமந்தா எந்த படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக தெலுங்கி விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த குஷி படம் வெளியானது . இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த ஆண்டு சமந்தா தனது அடுத்தப் படங்களின் வேலைகளை தொடங்கி வெயிட்டான கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.