Padmapriya : ஷூட்டிங்கில் பளார் என்று அறைந்தார் இயக்குநர்...அதிர்ச்சியை கிளப்பிய சேரன் பட நடிகை
தமிழ் இயக்குநர் ஒருவர் படப்பிடிப்பின் போது தன்னை எல்லார் முன்னாலும் அறைந்ததாக நடிகை பத்மபிரியா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்
பத்மபிரியா
நடிகை பத்மபிரியா தமிழ் , தெலுங்கு , மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வருபவர். தமிழில் தங்கர் பச்சன் இயக்கிய தவமாய் தவமிருந்து , பொக்கிஷன் , ராம் இயக்கிய தங்கமீன்கள் , உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து இவர் தமிழில் குறைவாகவே படங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்பு ஒன்றின் போது இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமே இதற்கு காரணம் என தற்போது தெரிவித்துள்ளார்
பத்மபிரியாவை அறைந்த இயக்குநர்
தமிழ் பட படப்பிடிப்பு ஒன்றின் போது அப்படத்தின் இயக்குநர் தன்னை அனைவர் முன் கன்னத்தில் அறைந்ததாக பத்மபிரியா தெரிவித்துள்ளார். நான் சரியாக நடிக்கவில்லை என்று கூறி அந்த இயக்குநர் பத்மபிரியாவை அறைந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் இயக்குநருக்கு அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் திரைப்படங்கள் இயக்குவதற்கு தடை விதித்தது தயாரிப்பாளர் சங்கம்.
“ அதுவரை எனக்கு எந்த விதமான நெகட்டிவான அனுபவமும் ஏற்பட்டதில்லை. இயக்குநர் என்னை அறைந்தார். ஆனால் நான் அந்த இயக்குநரை அடித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. திரைத்துறையில் பெண்கள் தங்கள் எதிர்கொண்ட ஒரு பிரச்சனையைப் பற்றி பேசினால் அந்த பிரச்சனை அவர்களுக்கே எதிராக திருப்பிவிடப் படுகிறது. ” என அவர் தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிட்டி குறித்து பத்மபிரியா
சமீபத்தில் கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திரைத்துறையில் உள்ள ஆண்களால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பல வாக்குமூலங்களை இந்த அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க அமைப்பான அம்மா அமைப்பை நிர்வகித்து வந்த மோகன்லால் உட்பட அவரது தலைமையில் இருந்த 17 பேர் ராஜினாமா செய்தார்கள். இது குறித்து நடிகை பத்மபிரியா முன்பே கருத்து தெரிவித்திருந்தார்.
“ அம்மா உறுப்பினர்கள் ராஜினாமாவை தான் எதிர்பார்க்கவில்லை இது ஒரு பொறுப்பற்ற செயல். இந்த பிரச்சனையை வெறுமனே பாலியல் துன்புறுத்தல் பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது . இந்த மாதிரியான முறைகேடுகள் நடக்க காரணமாக இருக்கும் அதிகார அமைப்பையே கேள்வி கேட்க வேண்டும் “ என்று பத்மபிரியா தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க : Latest OTT Releases : யோகிபாபுவின் போட் முதல் விஜயின் தி கோட் வரை..லேட்டஸ்டாக ஓடிடிக்கு வரும் படங்கள்