Meera Mithun : சாப்பாட்டுக்கும் வழி இல்ல..! தங்க இடமும் இல்ல..! கையில சுத்தமா காசு இல்ல..! கதறும் மீராமிதுன்..!
சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு தனக்கு சாப்பிடுவதற்கும், தங்குவதற்கும் கூட எதுவுமே இல்லை என்று மீராமிதுன் புலம்பியுள்ளார்.
எட்டு தோட்டாக்கள் படம் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் மீராமிதுன். தானாசேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் துணை நடிகையாக நடித்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் இவர் ஏற்படுத்திய சர்ச்சைகளால் இவர் நெகட்டிவ் பாப்புலர் தமிழ்நாட்டில் அடைந்தார்.
தொடர்ந்து தேவையற்ற அவதூறு பேச்சுக்களை பிரபலங்கள் மீது பரப்பி வந்த இவர், பட்டியலின மக்கள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த மீராமிதுன் கடந்த சில நாட்களாக ஆள் அரவமின்றி இருந்தார். இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வேதனையுடன் மீராமிதுன் பேசியுள்ளார்.
அவர் தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை எண்ணம் அதிகமாகியதாகவும், அதற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியதுடன், தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாகவும் அதற்கு காரணம் இந்த சமுதாயம் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த சமுதாயம் தன்னை வாழ விடவில்லை என்றும் மீராமிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது நீதிமன்றத்திற்கு சென்று கையெழுத்து இடுவதற்கு கூட தன்னிடம் காசு இல்லை என்றும், வழக்கறிஞருக்கு அளிப்பதற்கு கூட போதியளவில் பணம் தன்னிடம் இல்லை என்றும் மிகவும் வேதனையுடன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்தியாவிற்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் பல சாதனைகளை படைத்த தனக்கு வீட்டில்கூட சேர்த்துக்கொள்ளவில்லை என்றும், தனக்கு தங்குவதற்கு வீடும், சாப்பிடுவதற்கு சாப்பாடும் கூட இல்லை என்றும் மீராமிதுன் கதறியுள்ளார்.
இவையனைத்தையும் கூறிய மீராமிதுன் தன்னுடைய இறப்பிற்கு பிறகு தான் படைத்த சாதனைகள் வெளியே வரும் என்றும் கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகை மீராமிதுன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அவர்களது மனைவி மற்றும் குடும்பத்தினரை மிகவும் தரக்குறைவாக தொடர்ந்து பேசி வந்தார். மேலும், பிரபலங்கள் உள்ளிட்ட பலரை மிகவும் இழிவாகவும் தொடர்ந்து பேசி வந்தார். மீராமிதுன் மீது மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், சர்ச்சை பேச்சால் மீராமிதுன் சிறைக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்