“குழந்தை நட்சத்திரம் முதல் சினிமாவில் மகளை அறிமுகம் செய்தது வரை”... மீனாவின் சினிமா வாழ்க்கை!
ராஜ்கிரண் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படம் மீனாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
நடிகை மீனாவின் கணவர் நுரையீரல் மற்றும் இருதயம் பிரச்சனை காரணமாக நேற்று நள்ளிரவு உயிரிழந்த நிலையில் சினிமாத்துறையினர் பலரும் மீனாவுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி வருகின்றனர்.குழந்தை நட்சத்திரம் முதல் மகளை சினிமாவில் அறிமுகம் செய்தது வரை சினிமாவில் மீனா நீண்டகாலமாக பயணித்து வருகிறார்.
1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி பிறந்த நடிகை மீனா 1982 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடித்த நெஞ்சங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டில் வெளியான ரஜினியின் எங்கேயே கேட்ட குரல், தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு ரஜினி நடித்த “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தின் மூலம் மீனா தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனம் பெற ஆரம்பித்தார். அதன்பின் குழந்தை நட்சத்திரமாக 45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் 1990 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அவருக்கு ராஜ்கிரண் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு திரும்பி பார்க்க முடியாதபடி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினியுடன் எஜமான், முத்து, வீரா, குசேலன், அண்ணாத்த ஆகிய படங்களிலும், கமலுடன் அவ்வை சண்முகி, அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
விஜய்யுடன் அவர் படங்களில் ஜோடியாக நடிக்காவிட்டாலும் ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தமிழில் அவர் நடித்த படங்களில் நாட்டாமை, பாரதி கண்ணம்மா, பொற்காலம், சேதுபதி ஐபிஎஸ்,வானத்தைப் போல உள்ளிட்ட படங்கள் மிக முக்கியமானவை. தமிழ் தவிர்த்து மலையாளம், தெலுங்கு திரையுலகிலும் அவர் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மலையாளத்தில் வெளியான த்ரிஷியம் அதிகம் கவனம் பெற்றது.
இதனிடையே கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான வித்யாசாகரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார்.
மீனாவின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், அவரின் கணவர் வித்யாசாகர் கடுமையான நுரையீரல் பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று நேற்று உயிரிழந்தார்.
48 வயதாகும் வித்யாசாகரின் மறைவு மீனாவின் ரசிகர்களையும், திரையுலகைச் சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் தங்கள் இரங்கல்களை சமூக வலைத்தளம் வாயிலாக மீனாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்