HBD Yogi Babu : டாப் கியரில் உச்சிக்கு சென்ற யோகி பாபு பர்த்டே இன்று... விமர்சனங்களை படிக்கட்டுகளாக்கி வெற்றி கண்டவர்...
காமெடி, செண்டிமெண்ட், உணர்வு பூர்வமான காட்சி இப்படி எது கொடுத்தாலும் சிக்ஸர் அடித்து பாராட்டுகளை குவித்து விடுவது யோகி பாபு ஸ்பெஷாலிட்டி.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்பது மிகவும் முக்கியமான மற்றும் அத்தியாவசியமான செக்மென்ட்டாக கருதப்படுகிறது. என்ன தான் சீரியஸ், ஆக்ஷன் திரைப்படங்கள் வெளிவந்தாலும் எல்லா காலகட்டங்களிலும் உள்ள மக்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு ஜனார் என்றால் அது சந்தேகம் இன்றி காமெடி தான். அப்படி காமெடியில் கலக்கிய எத்தனையோ கலைஞர்களை தமிழ் சினிமா கண்டுள்ளது. அந்த பெருமைமிக்க பாரம்பரியத்தில் தற்போது முக்கியான இடத்தை நிரப்பியுள்ளவர் நடிகர் யோகி பாபு. இன்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் ஒரு சில காட்சிகளில் தோன்றியவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அமீர் நடிப்பில் வெளியான 'யோகி' படத்தில் காமெடியனாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தாலும் பார்வையாளர்களின் கவனம் பெற்றார். அறிமுக படமே அவருக்கு அடையாளமாக மாறி 'யோகி' பாபு என அழைக்கப்பட்டார். அதற்கு பிறகு யோகி பாபு காட்டுல அடை மழைதான். தொடர்ச்சியாக கலகலப்பு, பையா, சென்னை எக்ஸ்பிரஸ், அட்டகத்தி, மான் கராத்தே, அரண்மனை என பட்டியல் நீண்டு கொண்டே போக யோகி பாபுவின் வளர்ச்சியும் தடுக்க முடியாத வெள்ளம் போல பாய்ந்தோடியது.
காலம்காலமாக நகைச்சவை நடிகர்கள் வெறும் காமெடியன்கள் மட்டும் அல்ல அவர்களால் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் திறமையான நடிப்பினை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்களின் கால்வழியில் வந்த யோகி பாபுவும் குணச்சித்திர கதாபாத்திரம் மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். பல உருவ கேலிகளை சந்தித்த யோகி பாபு அதை எதையுமே பொருட்படுத்தாமல் அதையே தனது வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாற்றி வெற்றிகண்டவர்.
முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், நயன்தாரா, விஜய் சேதுபதி என ஏராளமான நடிகர்களுடன் நடித்து பிரபலத்தின் உச்சிக்கு சென்றவர் தற்போது பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் உடன் இணைந்து 'ஜவான்' படத்தில் நடித்துள்ளார். ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்து விடும் ஆனால் யோகி பாபு டேட்ஸ் கிடைப்பது கொஞ்சம் சிரமம் என்ற அளவுக்கு மனுஷன் பிஸியாக நடித்து வருகிறார். காமெடி, செண்டிமெண்ட், உணர்வு பூர்வமான காட்சி இப்படி எது கொடுத்தாலும் சிக்ஸர் அடித்து பாராட்டுகளை குவித்து விடுவது யோகி பாபு ஸ்பெஷாலிட்டி.
'தர்மபிரபு' படத்தின் மூலம் ஹீரோவான யோகி பாபு, ஓடிடியில் வெளியான 'மண்டேலா' படத்தின் மூலம் டாப் கியரில் சென்றுவிட்டார். சமீபத்தில் வெளியான பொம்மை நாயகி படத்திலும் உணர்வுபூர்வமான ஒரு கதாபாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தினார். சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட், ஓடிடி, அறிமுக இயக்குநர்கள், அறிமுக ஹீரோ என எந்த ஒரு பாகுபாடும் இன்றி தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கும் யோகி பாபுவின் மனப்பான்மை அவரை ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரையுலகத்தினர் மத்தியிலும் புகழையும் பாராட்டையும், மரியாதையையும் பெருகி கொண்டே போகிறது. மேலும் மேலும் அவர் பல வெற்றி படங்களில் நடித்து பல விருதுகளை குவிக்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.
ஒன்ஸ் மோர் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் யோகி பாபு!!!