படுக்கைக்கு அழைத்தவருக்கு பளார் விட்ட அமலாபால் - விஷால் பகிர்ந்த பகீர் சம்பவம்!
ஹேமா கமிட்டி அறிக்கையில் வெளியான விஷயங்கள் மலையாள திரையுலகை புரட்டி போட்டு வருகிறது.
ரூமுக்கு வா என்று அழைத்த நிகழ்ச்சி மேலாளரை நடிகை அமலாபால் அடி வெளுத்து வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
தமிழ், மலையாளம் என பலவேறு மொழிகளில் நடித்து பிரபலாமனவர் நடிகை அமலாபால். தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. இதையடுத்து நடித்த மைனா படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதில் அமலாபால் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து தெய்வதிருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதனிடையே தலைவா பட இயக்குநர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில நாட்களிலேயே விவாகரத்து பெற்றுவிட்டனர்.
இதையடுத்து அமலாபால் வேறு நபரை திருமணம் செய்து தற்போது அவருக்கு குழந்தையும் பிறந்திருக்கிறது. அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் இருக்கிறது என்றாலும் சினிமாத்துறையில் சற்று அதிகம் என்றே சொல்லலாம். அதில் சிலர் மீண்டு வருகின்றனர். சிலர் திசை தெரியாமல் சிக்கி கொள்கின்றனர்.
அந்த வகையில் நடிகை அமலாபாலும் பாலியல் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்துள்ளார். ஹேமா கமிட்டி அறிக்கையில் வெளிவந்துள்ள விஷயங்கள் மலையாள திரையுலகை புரட்டி போட்டுள்ளது. இதில் பல முன்னணி நடிகர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நாளுக்கு நாள் இந்த விஷயம் சூடுபிடித்துக்கொண்டே செல்கிறது.
இந்த தாக்கம் தமிழ்திரையுலகின் பக்கம் திரும்பியுள்ளது. தமிழ் திரையுலகிலும் அட்ஜெஸ்மெண்ட் கலாச்சாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய விஷால் பெண்கள் துணிச்சலுடன் இதுபோன்ற விஷயங்களை கையாள வேண்டும் என்பதற்காக அமலாபாலுக்கு நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “மலேசிய நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பு அமலாபாலை நிகழ்ச்சி மேலாளர் ஒருவர் ரூமுக்கு அழைத்து அடிவாங்கினார். டின்னருக்கு ரூமுக்கு வாருங்கள் என அமலாபாலிடம் அந்த மேலாளர் அழைத்துள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த அமலாபால் அடிவெளுத்து வாங்கிவிட்டார். பின்னர் அமலாபால் என்னிடம் நடந்த சம்பவத்தை விளக்கினார். பின்னர் கார்த்தியிடம் நான் தெரிவித்தேன். உடனே அந்த மேலாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இதுபோன்ற உடனடி நடவடிக்கைதான் தேவைப்படுகிறது.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து பகிர்ந்த அமலாபால், “ஹேமா கமிட்டி அறிக்கையில் இருந்து மிகவும் கவலையளிக்கும் மற்றும் அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் வெளிவந்தன. இதற்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.