Vishal: "எப்படி இருந்த மனுஷன்.. இப்படி ஆகிட்டாரே? "விஷாலைப் பார்த்து பரிதாபப்படும் ரசிகர்கள்
மதகஜராஜா பட நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷாலின் உடல் நிலையைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஷால். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மதகஜராஜா. கடந்த 2012ம் ஆண்டு உருவான இந்த படம் 2013ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடர் நிதி சிக்கல்களுக்குப் பிறகு இந்த படம் வெளியாகாமலே கிடப்பில் போடப்பட்டது.
மதகஜராஜா:
அதன்பின்பு, விஷால் மற்ற படங்களிலும், படத்தின் இயக்குனர் சுந்தர் சி மற்ற படங்களிலும் கவனம் செலுத்தினர். இந்த நிலையில், பொங்கலுக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி படம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், கிடப்பில் இருந்த பல படங்களும் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.
அதில், யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் விஷாலின் மதகஜராஜா படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டது. சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் ரிலீசாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த படத்தின் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் விஷால், இயக்குனர் சுந்தர் சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பங்கேற்றனர்.
விஷால் உடல்நிலை:
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷாலின் நிலையைக் கண்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் காணப்படும் விஷால், நேற்று நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தபோது உடல் எடை குறைந்து கை நடுக்கத்துடன் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். குறிப்பாக, நிகழ்ச்சி மேடையில் அவர் கையில் நடுக்கத்துடன் மைக்கைப் பிடித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அவருக்கு காய்ச்சல் உள்ளதாக விழா மேடையில் தொகுப்பாளர் கூறினார். ஆனாலும், அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். முதலில் உடம்பைப் பாத்துக்கோங்க விஷால் சார்? என்று அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ரசிகர்கள் வேதனை:
சில ரசிகர்கள் அவரது தாமிரபரணி, திமிரு, சத்யம் பட காட்சிகளைப் பகிர்ந்து எப்படி இருந்த மனுஷன், இப்படி ஆகிட்டாரு என்று வேதனை தெரிவித்து வருகின்றனர். விஷாலின் இந்த நிலைக்கு காய்ச்சல் மட்டும்தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை. ஆனால், அவர் விரைவில் பழைய விஷாலாக ஆரோக்கியமாக காணப்பட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
47 வயதான விஷால் நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு ரத்னம் படம் ரிலீசானது. மேலும் அவரது நடிப்பில் துப்பறிவாளன் 2ம் பாகம் உருவாகி வருகிறது. மதகஜராஜா படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அஞ்சலி, வரலட்சுமி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சீனு மோகன், சிட்டிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். சந்தானம் பிரதான காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் 12ம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.