Actor Vikram: அச்சச்சோ.. பயிற்சியின்போது படுகாயம்.. ஒரு மாதம் ரெஸ்ட்.. நடிகர் விக்ரமுக்கு என்ன ஆச்சு?
தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் காயம் அடைந்ததால் தொடர்ந்து நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அவர் கலந்துக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் காயம் அடைந்ததால் தொடர்ந்து நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அவர் கலந்துக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவரான நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக தங்கலான் படம் உருவாகி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
தங்கலான் படத்தின் படப்பிடிப்பு கேஜிஎஃப் படம் எடுக்கப்பட்ட கோலார் பகுதியில் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்தாண்டு இப்படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விக்ரம் தனது 57வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரது பிறந்தாளை சிறப்பிக்கும் வகையில் புது போஸ்டர் ஒன்றையும், தங்கலான் படத்தின் மேக்கிங் வெளியானது. இந்த வீடியோவில், ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் காட்சிக்கு தயாராவது,செட் போடும் பணிகள், பா.ரஞ்சித் காட்சியை விளக்குவது,உள்ளிட்ட பல காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
இதனிடையே தங்கலான் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று தங்கலான் படப்பிடிப்பு ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஒருமாதம் அவரை ஓய்வு எடுக்க சொல்லியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து நடைபெறும் தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. அவர் இல்லாத காட்சிகள் முழு வீச்சில் படமாக்கப்பட்டு வருகிறது.
பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த பாராட்டு
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்படத்தின் 2 ஆம் பாகம் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான இந்த படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் இவரின் நடிப்பு மிகுந்த பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.