The GOAT: விஜய் ஃபேன்ஸ்! தி கோட் படம் எவ்ளோ நேரம் தெரியுமா? சர்ட்டிபிகேட்டை பாருங்க!
நடிகர் விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படத்திற்கு சென்சார் போர்ட் வழங்கிய தணிக்கை சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியைத் தொடங்கிய அவர் அரசியல் பணிகளை கவனிக்கும் நோக்கத்தில் இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், ஏற்கனவே ஒப்பந்தமாகிய 2 படங்களில் மட்டும் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார்.
தி கோட் படம் எவ்ளோ நேரம்?
இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அவர் நடித்துள்ள கோட் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் ஒரு வார காலம் மட்டுமே இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த சூழலில், கோட் படம் எத்தனை நிமிடங்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்சார் போர்ட் தி கோட் படத்திற்கு அளித்துள்ள தணிக்கைச் சான்றிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி. கோட் படம் மொத்தம் 183 நிமிடங்கள் 14 நொடிகள் ஓடுகிறது. அதாவது, 3 மணி நேரம் மொத்த படமும் ஓடுகிறது.
ரசிகர்கள் ஆர்வம்:
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக இரண்டே கால் அல்லது இரண்டரை மணி நேரம் மட்டுமே படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. 3 மணி நேரம் படம் எடுக்கப்படுவது குறைந்துவிட்டது. இருப்பினும், விஜய்யின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதாலும் ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படம் மூன்று மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக படத்தின் நீளம் என்பது படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் ஒன்றாக கருதப்படுவதால் மூன்று மணி நேரமாக படம் இருந்தாலும் திரைக்கதை வலுவாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
விஜயகாந்த்:
தி கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல நடிகர் மோகன் வில்லனாக கம்பேக் தந்துள்ளார். இவர்களுடன் லைலா, சினேகா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் மறைந்த விஜயகாந்தின் காட்சிகள் ஏஐ தொழில்நுட்பத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.