Actor Vadivelu | மக்களை இன்னும் அதிகமாக சிரிக்கவைத்த பிறகுதான் உயிர்போகும் - வடிவேலு
சூரஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் இன்று நடைபெற்றது.
கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் பெரிதும் நடிக்காமல் இருந்த வடிவேலு, மீண்டும் சினிமாவில் தனது அடுத்த பயணத்திற்கு தயாராகி வருகிறார். இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படத்தால் ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலுக்கு நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது. இதனால் அவர் பழையபடி நடிப்பதற்கு மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சூரஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் வடிவேலு நடிக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “இனி என் பயணம் நகைச்சுவை பயணமாக இருக்கும், இன்னும் அதிகமாக சிரிக்க வைத்துவிட்டுதான் என் உயிர்போகும். மறைந்த நடிகர் விவேக்கின் இடத்தையும் இனி சேர்த்து நிரப்ப வேண்டியுள்ளது” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். மேலும், திரைத்துறையில் மீண்டும் நடிக்க இருப்பது பற்றிய கேள்விக்கு, ”எனக்கு எண்டே கிடையாது” என கூறி சிரித்துள்ளார் நடிகர் வடிவேலு.
கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியுள்ள வடிவேலுவின் நடிப்பில் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. முதல் பாகத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கரே தனது எஸ் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படம் இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி என்ற பெயரில் உருவாகி வந்தது. ஆனால், வடிவேலுவிற்கும் தயாரிப்பாளர் தரப்பிற்கும் இடையே போட்டி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இம்சை அரசன் 23-ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், நடிகர் வடிவேலு படத்தில் நடிக்க ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் தயாரிப்பாளர் தரப்பில் குற்றம் சாட்டியது.
இதனால், இன்றைய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலும், இயக்குனர் ஷங்கர் படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, “ஷங்கர் படத்தில் இனி நடிக்க மாட்டேன். இனி அந்த பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், திரைத்துறையில் மீண்டும் நடிக்க இருப்பது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த வடிவேலு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பேசிய வடிவேலு, ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் கொரோனாவை முதல்வர் கட்டுப்படுத்தியுள்ளார் என்றார். இன்று நடைபெற்ற அறிவிப்பு நிகழ்ச்சியிலும் முதலமைச்சரை குறிப்பிட்டு பேசிய அவர், “முதலமைச்சரை சந்தித்து வந்ததில் இருந்து எனது வாழ்க்கை பிரகாசமாக உள்ளது. இனிமேலும் நல்லது நடக்கும் என நம்புகிறேன். இதுவரை நல்லது நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.