Actor Soori: 45 ஆண்டுகால அனுபவம்.. இளையராஜா செய்த சிறப்பான சம்பவம்.. நெகிழ்ந்துபோன சூரி..!
தனது 45 ஆண்டு கால அனுபவத்தில் இசையமைப்பாளர் இளையராஜா செய்த சிறப்பான சம்பவம் குறித்து நடிகர் சூரி கல்லூரி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
தனது 45 ஆண்டு கால அனுபவத்தில் இசையமைப்பாளர் இளையராஜா செய்த சிறப்பான சம்பவம் குறித்து நடிகர் சூரி கல்லூரி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகமே தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதையின் நாயகனாக சூரியும், போராளியாக வாத்தியார் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
முதல்முறையாக வெற்றிமாறன் படத்துக்கு இளையராஜா இசையமைத்த நிலையில் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக காட்சிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே சென்னை குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் , தக்ஷாசீலா என்ற தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கலைவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி, நடிகர் மிர்ச்சி சிவா, நடிகை அம்மு அபிராமி, பாபா பிளாக்ஷிப் படக்குழுவினர், நடிகர் கவின் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடிய நடிகர் சூரி தான் நடித்து வெளியாகியுள்ள விடுதலை படம் குறித்த சுவாரஸ்யங்களை விவரித்தார்.
அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், இசைஞானி இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் தான் நடித்த விடுதலை படத்தின் பாடலுக்கு இசையமைத்ததாக தெரிவித்தார். அதேசமயம் தனது 45 ஆண்டு கால அனுபவத்தில், அவர் ஹீரோவை அருகில் வைத்து கொண்டு ட்யூன் போட்டது இது தான் முதன்முறை என தன்னிடம் கூறியதாகவும் சூரி நெகழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மாணவ மாணவிகள் நன்றாக படித்து, நமது மண்ணிலேயே வேலை பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அனைவரும் தங்களது பெற்றோர்களை சிறப்பாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் மாணவர்கள் மொபைல் போன்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்,ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழக்கினார்.
இந்த கலை விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.