Watch Video: கூட்டத்தோடு கூட்டமா நின்றவன்; புலி வேஷத்துக்கு பெயிண்ட் அடிச்சேன்: சூரியின் மறுபக்கம்
இன்று வெற்றிமாறனின் 'விடுதலை' படத்தின் கதாநாயகனாக சூரி நடித்தாலும் அவர் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது
தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்பது மறுக்கமுடியாத ஒரு அங்கமாக பயணித்து வருகிறது. அப்படி காமெடி முக்கியம் என்றால் காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் தானே. அப்படி தனக்கென ஒரு ஸ்டைலில் காமெடியில் கலக்கிய நடிகர் சூரி இன்று ஒரு தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அளவுக்கு தனது நடிப்பின் மீது அத்தனை நம்பிக்கை வைத்து இத்தனை ஆண்டுகளாக காத்திருந்து இன்று இந்த அடையாளத்தை பெற்றுள்ளார்.
கலை இயக்குனரின் உதவியாளர் :
ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் திரையில் ஒரு சில திரைப்படங்களில் கூட்டத்தோடு கூட்டமாக தலை காட்டியவர். ஏராளமான போராட்டங்களை சந்தித்த சூரி கலை இயக்குனர் தோட்டா தரணியின் குழுவில் ஒரு உதவியாளராக சேர்ந்தார். அந்த வகையில் காதல், வின்னர், உள்ளம் கொள்ளை போகுதே, பீமா, சங்கமம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். இப்படி தொடங்கிய அவரின் திரைப்பயணம் பின்னாளில் ஒரு நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தின் மூலம் பரிச்சயமான முகமானார். அதனை தொடர்ந்து கார்த்தி, விமல், விஷ்ணு விஷால், விஜய், சிவகார்த்திகேயன், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கினார். இவரின் உடல்மொழி, முகபாவனைகள், பேசும் ஸ்லாங், கவுண்டர் என அனைத்தையும் மக்கள் ரசித்தனர்.
வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பு :
இப்படி படிப்படியாக வளர்ச்சியை எட்டிய நடிகர் சூரி தற்போது இயக்குனர் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படத்தில் கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுவரையில் காமெடியனாக நடிகர் சூரியை பார்த்த மக்களுக்கு அவரை ஒரு வெயிட்டான ரோலில் போலீஸ் கான்ஸ்டபிளாக பார்க்க உள்ளனர்.
சூரியின் ஆரம்ப காலகட்டம் :
சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சூரி, சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டம் குறித்த ஒரு நிகழ்வை பகிர்ந்து இருந்தார். "சங்கமம் திரைப்படத்தில் ஒரு ஓரத்தில் கூட்டத்தில் கேட்டருகே நின்ற ஒரு ஆள் தான் நான். அது மட்டுமில்லை நான் அப்படத்தின் கலை இயக்குனரிடம் உதவியாளராக இருந்தேன். 'ஆலாலா கண்டா ஆடலுக்கு தகப்பா...' பாடலில் மணிவண்ணன் சாருடன் சேர்ந்து சின்ன பசங்க புலி வேஷம் போட்டு டான்ஸ் ஆடியிருப்பாங்க. அவங்களுக்கு அப்படி பெயிண்ட் அடிச்சது நான் தான்" என சூரி கூறியிருந்தார். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு இருந்தால் நிச்சயமாக வாழ்க்கை ஒரு மனிதனுக்கு நிச்சயம் முன்னேற்றத்தை கொடுக்கும் என்பதற்கு சூரியின் இந்த வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணம். அவரின் இத்தனை ஆண்டுகால உழைப்பிற்கு தமிழ் சினிமா கொடுத்த அங்கீகாரம் வெற்றிமாறனின் 'விடுதலை'.