11 Years of Sattai: ’கருத்து கனி’ ஆன சமுத்திரகனி.. ஆசிரியர்களுக்கே பாடம் எடுத்த ‘சாட்டை’ வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவு..!
நடிகர் சமுத்திரகனியின் சீரிய நடிப்பின் மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘சாட்டை’ படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைகிறது.
![11 Years of Sattai: ’கருத்து கனி’ ஆன சமுத்திரகனி.. ஆசிரியர்களுக்கே பாடம் எடுத்த ‘சாட்டை’ வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவு..! Actor samuthirakani's Saattai Movie Completes 11 years today 11 Years of Sattai: ’கருத்து கனி’ ஆன சமுத்திரகனி.. ஆசிரியர்களுக்கே பாடம் எடுத்த ‘சாட்டை’ வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/19/4b5974703d570b2872fc01c463c12b691695063268879572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் சமுத்திரகனியின் சீரிய நடிப்பின் மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘சாட்டை’ படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைகிறது.
சாட்டை படம் அறிமுகம்
இயக்குநர் பிரபு சாலமனிடம் 'மைனா' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய அன்பழகன் இயக்கியிருந்த முதல் படம் ‘சாட்டை’. இந்த படத்தில் சமுத்திரகனி, தம்பி ராமையா, யுவன், மகிமா நம்பியார், ஜூனியர் பாலையா, பாண்டி, ஜீவா ரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்திருந்த நிலையில் படத்தை பிரபு சாலமன் சொந்தமாக தயாரித்திருந்தார். பள்ளி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை கவர்ந்த நிலையில், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
படத்தின் கதை
மாவட்டத்திலேயே தேர்ச்சி சதவீதத்தில் மிகவும் பின் தங்கிய அரசு பள்ளி ஒன்றுக்கு பணி மாற்றுதலாகி வருகிறார் ஆசிரியர் தயாளன் (சமுத்திரக்கனி). அந்த பள்ளியின் நிலைமையை மாற்ற தலைமை ஆசிரியர் ஜூனியர் பாலையா துணையோடு பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். ஆனால் இவை அனைத்தும் துணை தலைமை ஆசிரியரான சிங்கபெருமாள் (தம்பி இராமைய்யா) உள்ளிட்ட மற்ற சில ஆசிரியர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் தயாளனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் மத்தியில் தயாளனுக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து மிகப்பெரிய பிரபலம் ஆகிறார்.
இதில் யுவன் - மஹிமா நம்பியாரின் காதல், பள்ளிகளில் நடக்கும் காமெடியான காட்சிகள், பள்ளி ஆசிரியர்களின் விதவிதமான அணுகுமுறைகள் என அனைத்தையும் தோலூரித்து காட்டியது இந்த ‘சாட்டை’.
கருத்து கனி ஆன சமுத்திரக்கனி
மிகவும் அன்பான, தோழமையான ஆசிரியராக vவரும் சமுத்திரக்கனியை பார்க்கும்போது நமக்கு இப்படி ஒரு ஆசிரியர் இருந்தும் கொண்டாடாமல் விட்டுவிட்டோமே என் நினைத்தவர்கள் ஏராளம். இந்த படத்தில் அட்வைஸ் மழை பொழிந்த நிலையில் சமுத்திரகனி ‘கருத்து கனி’ ஆக பிறரால் அழைக்கப்பட்டார். மேலும் அனைவரும் மிகச்சிறப்பாக் நடித்திருந்தனர். தம்பி ராமைய்யா, ஜூனியர் பாலய்யா, யுவன், மஹிமா, பாண்டி என அனைவரும் வர காட்சிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இயக்குநருக்கு கிடைத்த பாராட்டுகள்
தமிழ் சினிமாவில் பள்ளி மாணவர்களை மையாக வைத்து பல படங்கள் வெளிவந்து இருந்தாலும் பள்ளி ஆசிரியர்கள் அதிலும் குறிப்பாக அரசு பள்ளி ஆசிரியர்களின் அலட்சியத்தை பற்றி மிகவும் துணிச்சலாக திரையில் கொண்டு வந்த படம் என்றால் அது சாட்டை தான். இதன் இயக்குனர் அன்பழகனுக்கு மிகப்பெரிய பாராட்டுகள். மேலும் சமுத்திரக்கனியின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஈட்டியை போல உள்ளே ஊடுருவியது. இன்றைய மீம்ஸ் டெம்பிளேட் ஆகவும் வலம் வருகிறது.
அதேபோல ஒரு சில சீன்களில் மட்டுமே வந்தாலும் மனதை வருடி செல்கிறார் ஜூனியர் பாலைய்யா. பள்ளியில் ஏற்படும் இன்பாட்சுவேஷன் காதல் காட்சிகளையும் மிகவும் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குனர். இசையமைப்பாளர் இமானின் இசை மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)