Rajinikanth: ”சேகர் பாபு ரொம்ப அன்பானவர்.. அவருக்கு இன்னொரு முகம் இருக்கு.. பாட்ஷா மாதிரி” - ரஜினிகாந்த்
Rajinikanth: சேகர் பாபு ரொம்ப அன்பானவர்.. அவருக்கு இன்னொரு முகம் இருக்கு.. பாட்ஷா மாதிரி என்று பேசியுள்ளார் ரஜினிகாந்த்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த், அவரின் வாழ்க்கை பயணம் குறித்து நெகிழ்ச்சியான கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘எங்கள் முதல்வன் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் திமுகவினர் புகைப்பட கண்காட்சி அமைத்துள்ளனர். சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பிப்ரவரி 28 ஆம் தேதி திறந்து வைத்தார்.
இந்த புகைப்பட கண்காட்சியில் மு.க.ஸ்டாலினின் சிறு வயது புகைப்படம், கருணாநிதியுடன் இருந்த தருணங்கள், மிசா காலத்தில் சிறையில் பட்ட கஷ்டங்கள் என பல அரிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை திமுகவினர், கூட்டணி கட்சியினர் தவிர ஏராளமான பொதுமக்களும் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் புகைப்பட கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களோடு தானும், மு.க.ஸ்டாலினும் எடுத்த புகைப்படத்தையும் பார்த்து நெகிழ்ந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ரொம்ப அருமையான ஒரு கண்காட்சி. என்னை ரொம்ப நாளா கூப்பிட்டே இருந்தாங்க. நான் ஷூட்டிங்கில் இருந்ததால வர முடியல. இந்த கண்காட்சியை பார்க்கும் போது என்னுடைய இனிய நண்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், 54 ஆண்டுகள் அரசியல் பயணம் என அனைத்தும் நினைவுக்கு வருகின்றது. கட்சியில் உழைத்து படிப்படியாக பல பதவிகளை வகித்து இன்றைக்கு முதலமைச்சரா இருக்கிறார் என்றால் அது மக்கள் அவரது உழைப்புக்கு கொடுத்த அங்கீகாரம் என புகழ்ந்தார்.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் சேகர்பாபுவும் உடனிருந்தார். அவரைப் பற்றி பேசிய ரஜினிகாந்த், ”அமைச்சர் சேகர்பாபு ரொம்ப அன்பானவர். விசுவாசமானவர். அவருக்கு பாட்ஷா மாதிரி இன்னொரு முகமும் இருக்கு” என கூறினார்.