விஜய் அழைத்தாலும் கட்சியில் சேரமாட்டேன் - பிரபல நடிகர் ஓபன் டாக்
ஆளும் கட்சியை விமர்சித்தால்தான் அடுத்த இடத்துக்கு வர முடியும். எம்ஜிஆர், கருணாநிதி அதைத்தான் செய்தனர் - நடிகர் பார்த்திபன்

புதுச்சேரி: புதுச்சேரியில் படப்பிடிப்பு நடத்துவது தொடர்பாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் புதுச்சேரி சட்ட பேரவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனை நேரில் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், “நான் புதிதாக ‘54-வது பக்கத்தில் ஒரு மயிலிறகு’ எனும் திரைப்படத்தை தயாரிக்க உள்ளேன். இதன் படப்பிடிப்பு 99 சதவீதம் புதுச்சேரியில் நடைபெறவுள்ளதால் அரசின் ஒத்துழைப்பை கோரி சுற்றுலாத்துறை அமைச்சரைச் சந்தித்தேன். அவர் கனிவோடு ஏற்றுக்கொண்டு புதுச்சேரி அரசு மூலம் என்ன செய்து தர முடியுமோ, அதனை செய்து தருவதாக தெரிவித்துள்ளார். என்னுடைய படத்தில் எப்போதும் கதாநாயகன் நான்தான். இது காதலை மையமாக கொண்ட திரைப்படம்” என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி?
அதற்கு பார்த்திபன், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கலாம். யார் வேண்டுமானாலும் முதல்வராக ஆசைப்படலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தும்போது பல தடைகள் நிச்சயம் இருக்கும்.
அரசியலில் ஆட்சியை பிடிப்பது என்பது பெரிய விஷயம்
ஜல்லிக்கட்டில் பல தடைகளை தாண்டி தான் மாடு பிடிக்க வேண்டும் என்று இருக்கும் போது, அரசியலில் ஆட்சியை பிடிப்பது என்பது பெரிய விஷயம். ஆகவே நடிகர் விஜய் அவருக்கு ஏற்படும் தடைகளை தாண்டினால் தான் உண்மையான தலைவருக்கு அழகு என்பது தெரியும்.
ஆளும் கட்சியை விமர்சித்தால் தான் அடுத்த இடத்துக்கு வர முடியும். எம்ஜிஆர், கருணாநிதி அதைத்தான் செய்தனர். ஆளும் கட்சியை எதிர்த்துதான் வர வேண்டும். நடுநிலையோடு வரமுடியாது.
விஜய் அழைத்தாலும் அவரது கட்சியில் சேரமாட்டேன்
இவற்றையெல்லாம் நான் பொதுவாக ரசிக்கின்றேன். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. விஜய் அழைத்தாலும் அவரது கட்சியில் சேரமாட்டேன். என்னுடைய அரசியல் நோக்கு என்பது ஏற்கெனவே இருப்பது இல்லாமல் வேறொரு மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் அரசியலின் நல்ல விஷயம். அது என்னால் செய்ய முடியுமா என்றால், இப்போது எனக்கு இருக்கும் கவனம் முழுவதும் சினிமா மீது மட்டும்தான்.
நடிகர் விஜய் இரு மேடைகளில்தான் பேசியுள்ளார். அதில் அவர் கொஞ்சம் கூட தவறில்லாமல் பேசியது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நம்முடைய நாடு பேசியே முன்னுக்கு வந்த நாடு. அரசியல் என்றாலே பேச்சு. அதற்கு விஜய் தகுதியாக இருக்கிறார். அவருக்கு கூடும் கூட்டம் அவரது கட்சிக்கு வாக்களிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பெரியார் நம்முடைய பாரம்பரியம், சமூகத்தில் ஒதுக்கவோ நீக்கவோ முடியாத ஒருவர்
பெரியார் நம்முடைய பாரம்பரியம், சமூகத்தில் ஒதுக்கவோ நீக்கவோ முடியாத ஒருவர். அவரை எதிர்ப்பதற்கு பின்னால் வேறு அரசியல் இருக்கலாம். யாரோ ஒருவர் சொல்வதை வைத்து பதில் சொல்ல முடியாது. பெரியார் என்பவர் நமக்கு எப்போதுமே பெரியார் தான். அதில் சிறிய கருத்து வேறுபாடு கூட கிடையாது. சீமான் அரசியல் கட்சி தொடங்கி, தற்போது பெரியாரை விமர்சித்து வருகிறார். அவர் அரசியல் நடத்துவதற்குக் கூட பெரியார்தான் தேவைப்படுகிறார். அந்தளவுக்கு பெரியார் தாக்கம் உள்ளது என தெரிவித்தார்.

