’என்னை கதாநாயகனாக உயர்த்திய மாபெரும் மனிதர்’ - பிரதாப் போத்தனுக்கு நெப்போலியன் கண்ணீர் அஞ்சலி!
1994ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இந்தப் படம் நெப்போலியனின் திரை வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனை படமாக அமைந்தது.
தன்னை கதாநாயகனாக உயர்த்திய சீவலப்பேரி பாண்டி படத்தை இயக்கிய மாபெரும் மனிதர் என நடிகர் நெப்போலியன் பிரதாப் போத்தன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் அவரது உடலுக்கு பிரபலங்கள் பலரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரபல நடிகர், இயக்குநர்
1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்த பிரதாப் போத்தன், 1978ஆம் ஆண்டு இயக்குனர் பரதனின் ’ஆரவம்’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழில் 1979ஆம் ஆண்டு ’அழியாத கோலங்கள்’ படத்தில் அறிமுகமான பிரதாப் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும் 10க்கும் மேற்பட்ட படங்களை பிரதாப் போத்தன் இயக்கியும் உள்ளார்.
'சீவலப்பேரி பாண்டி’ நாயகன் நெப்போலியன் இரங்கல்!
அந்த வகையில் தமிழில் பிரதாப் போத்தன் இயக்கிய மிகப்பெரும் ஹிட் படங்களில் ஒன்று ’சீவலப்பேரி பாண்டி’. 1994ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இந்தப் படம் நெப்போலியனின் திரை வாழ்வில் மிகப்பெரும் திருப்புமுனை படமாக அமைந்தது.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசித்து வரும் நடிகர் நெப்போலியன் பிரதாப் போத்தனுக்கு இரங்கல் தெரிவித்து முன்னதாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “எனது அன்புக்குள்ள திரைப்பட இயக்குனர் நடிகர் திரு பிரதாப் போத்தன் அவர்களின் மறைவுக்கு எனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
View this post on Instagram
எனது திரையுலக வாழ்க்கையில் என்னை கதானாயகனாக உயர்த்திய “சீவலப்பேரிபாண்டி” என்ற திரைப்படத்தை இயக்கிய மாபெரும் மனிதர் நம்மை விட்டு மறைந்துவிட்டார்..! அவரது புகழ் உயர்ந்து நிற்க்கட்டும்..!” எனத் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள ’சீவலப்பேரி’ என்ற கிராமத்தில் வாழ்ந்த பாண்டி என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம், பிரபல தனியார் வார இதழில் தொடராக வந்தபோது கிடைத்த வரவேற்பை அடுத்து திரைப்படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குநர்கள் மணிரத்னம், சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர்கள் ராஜீவ் மேனன், பிசி ஸ்ரீராம், நடிகர்கள் கமல்ஹாசன், கருணாஸ், மனோபாலா,ஒய்.ஜி.மகேந்திரன், நரேன்,ரியாஸ்கான், சுரேஷ் சக்கரவர்த்தி, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் பிரதாப் போத்தனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.