Dulquer Salmaan: 'எத்தன கார் இருக்குனு சொன்னா பிரச்சினையாகிடும்..' விஜய்க்கு டஃப் கொடுக்கும் நடிகர் துல்கர் சல்மான்!
தன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னிடம் எத்தனை கார்கள் உள்ளன என்பது குறித்து துல்கர் அளித்துள்ள சுவாரஸ்யமான பதில் கவனமீர்த்துள்ளது.

நடிகர் துல்கர் சல்மானிடம் எத்தனை கார்கள் உள்ளன என்பதுதான் தற்போது மலையாள சினிமா உலகில் ஹாட் டாப்பிக்!
மலையாளம் தாண்டி, தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா ஸ்டாராக துல்கர் அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் தெரிந்த முகமாக வலம் வருகிறார். அனைத்து மொழிகளிலும் ஹிட் கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள துல்கர் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, கோலிவுட்டில் நடிகர் விஜய்யை போல், மலையாள திரை உலகில் நடிகர் துல்கர் சல்மானும் ஒரு மிகப்பெரும் கார் விரும்பி.
எத்தனை கார் இருக்கு?
தன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னிடம் எத்தனை கார்கள் உள்ளன என்பது குறித்து துல்கர் அளித்துள்ள சுவாரஸ்யமான பதில் கவனமீர்த்துள்ளது. தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய கார் கலெக்ஷன் சுவாரஸ்யமானது மற்றும் கவர்ச்சிகரமானது எனத் தெரிவித்துள்ளார்.
”துல்கர் எத்தனை கார்களை வைத்திருக்கிறார்” எனக் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ”இது என்னை சிக்கலில் சிக்க வைக்கும் கேள்வி” எனக் குறும்பாக பதிலளித்துள்ளார் துல்கர்.

மேலும், தன்னிடம் உள்ள கார்களின் எண்ணிக்கையைக் கூற மறுத்த துல்கர், ”என்னிடம் நிறைய பயன்படுத்தப்பட்ட கார்கள் உள்ளன, நான் கார்களை ரீஸ்டோர் செய்து அவற்றை உபயோகிப்பேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
கலிஃபோர்னியா சாலை தான் சூப்பர்
மேலும் தன்னுடைய விருப்பமான சாலை கலிஃபோர்னியாவில் உள்ளது எனவும் மனம் திறந்துள்ளார் துல்கர். ”கலிஃபோர்னியாவில் உள்ள ரூட் 1 என்னைப் பொறுத்தவரை சிறந்த சாலை. சான் ஃப்ரான்சிஸ்கோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் வரை காரில் பயணித்தபோது நான் மாண்டேரியில் இருந்து கடலோரப் பாதையில் பயணித்தேன்.
அது ஞாயிற்றுக்கிழமை, அன்று நாம் அனைத்து கார் க்ளப்புகளையும் பார்க்க முடியும், அந்த சாலை மிகவும் அழகானது. மிக உச்சியிலிருந்து வரும் நீங்கள் திடீரென கடல் மட்டத்தில் இருப்பீர்கள். நான் இரண்டு முறை அவ்வழியே சென்றுள்ளேன். எனக்கு அவ்வளவு பிடித்திருந்தது. என் அப்பாவும் உடன் இருந்தார். ஆனால், அவர்கள் எல்லாரும் தூங்கி விட்டார்கள்” என உற்சாகமாகப் பேசியுள்ளார்.
பாட்ட பொறுத்து வேகமும் அதிகமாகும்...
கார் ஓட்டும்போது பாடல்கள் கேட்பதை மிகவும் விரும்புவதாகக் கூறியுள்ள துல்கர், பாடலின் வேகம், கார் ஓட்டும் வேகத்தை தீர்மானிக்கும் என்றும் கூறியுள்ளார்.

நான் கேட்கும் இசையில் என்னுடைய ட்ரைவிங் பாதிக்கப்படும். வேகமான ’ஃபாஸ்ட்’ பீட் பாடல் என்றால் நான் காரையும் வேகமாக ஓட்டுவேன். நான் சென்னை, துபாய்க்கு வேலைக்காக செல்லும்போது ஆத்திரத்துக்கும் கவலைக்கும் ஆளாவேன். இந்கு செல்லும் வழியில் மக்கள் மோசமாக வண்டி ஓட்டுவார்கள். அதனாலேயே என்னை அமைதிப்படுத்த ஃப்ரேங்க் சினாட்ரா, டிமாவை கேட்கத் தொடங்கினேன். நான் மெதுவாக கார் ஓட்டி மோசமான ட்ரைவர்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் நடிகரானதில் இருந்து சர்ச்சைகளைத் தவிர்க்க வேகமாக கார் ஓட்டுவதைக் குறைத்துக் கொண்டுள்ளதாகவும் துல்கர் தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டு துல்கர் தெலுங்கில் நடித்த சீதா ராமம் படம் மாபெரும் ஹிட் படமாக அமைந்து கலெக்ஷன் அள்ளிய நிலையில், அவர் சீரியல் கில்லராக நடித்த சுப் படம் பாராட்டுகளைப் பெற்றது.
2023ஆம் ஆண்டு இவர் நடிப்பில் கிங் ஆஃப் கோதா படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





















