டி ராஜேந்தரிடம் போட்டி போட்டு தோற்றுப்போன ரஜினிகாந்த்! செய்கை.. தரமான செய்கை
ரஜினிகாந்தை படம் இயக்க கிடைத்த வாய்ப்பு டி ராஜேந்தருக்கு எப்படி நழுவிப்போனது என்றும், பின்னர் ரஜினியிடமே போட்டி போட்டு எப்படி வெற்றி பெற்றார் என்பதையும் கீழே காணலாம்.

தமிழ் திரையுலகின் பன்முகத் திறமை கொண்ட கலைஞராக உலா வருபவர் டி.ராஜேந்தர். பிரபல நடிகர் சிம்புவின் தந்தை இவர் ஆவார். நடிகர், இயக்குனர். இசையமைப்பாளர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் என பல திறன் கொண்டவர்.
ரஜினியை இயக்க கிடைத்த வாய்ப்பு:
இவருக்கு நடிகர் ரஜினிகாந்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது குறித்தும், பின்னர் அந்த படம் எப்படி கைவிடப்பட்டது என்பதை கீழே விரிவாக காணலாம். நடிகர் ரஜினிகாந்த் ஒரு நட்சத்திர நடிகராக வளர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை தொடங்கியவர் டி ராஜேந்தர். ஒரு தலை ராகம் படம் மூலமாக அறிமுகமான இவர் பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றார்.
அதிகாரப்பூர்வமாக இவர் வசந்த அழைப்புகள் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். ஒரு தலைராகம், ரயில் பயணங்களில் என ப்ளாக்பஸ்டர் படங்களை தந்தவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது. அப்போது அவர் திரைக்கதை ஒன்றை தயார் செய்து நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். உச்ச இயக்குனராக உலா வந்து கொண்டிருந்த டி.ராஜேந்தருடன் இணைந்து பணியாற்ற ரஜினிகாந்தும் ஆர்வத்துடன் இருந்துள்ளார்.
கைவிடப்பட்டது ஏன்?
டி.ராஜேந்தர் சொன்ன கதையும் ரஜினிகாந்துக்கு பிடித்துப் போக படப்பிடிப்புக்குச் செல்ல முடிவு செய்துள்ளனர். அப்போது, இந்த படத்தை இயக்குவது மட்டுமின்றி தயாரிக்கவும் டி ராஜேந்தர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஜினிகாந்தோ இந்த படத்தை தாங்கள் இயக்கினால் மட்டும் போதும், மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தை தானே ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், டி.ராஜேந்தர் தனக்கு தற்போது பண நெருக்கடி இருப்பதால் தானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால், ரஜினிகாந்த அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தாங்கள் எப்போது பெரிய தயாரிப்பாளர் ஆகிறீர்களோ அப்போது படம் இணைந்து பணியாற்றலாம் என்று கூறி ரஜினிகாந்த் விடைபெற்றுள்ளார்.
சொல்லி அடித்த டிஆர்:
ரஜினிகாந்திற்கு கூறிய அதே கதையை தானே இயக்கியது மட்டுமின்றி தயாரித்து டி ராஜேந்தர் வெளியிட்டார். அந்த படம்தான் உயிருள்ள வரை உஷா. 1983ம் ஆண்டு வெளியான இந்த படம் அந்தாண்டின் மாபெரும் ப்ளாக்பஸ்டர் வெற்றியாகும். இந்த படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு பதிலாக டி.ராஜேந்தரே கதாநாயகனாக நடித்து தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கினார்.
டி ராஜேந்தர் படம் வெளியான அதே 1983ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி நாளில் ரஜினிகாந்த் நடித்த துடிக்கும் கரங்கள் படமும் வெளியானது. ஆனால், ரஜினிகாந்தின் படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. உயிருள்ளவரை உஷா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற வைகை கரை காற்றே நில்லு பாடல் இன்றளவும் எவர்கிரீன் பாடலாக உள்ளது.





















