(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video : ரொம்ப வியப்பா இருக்கு... 'வாழை' படம் பார்த்த பிரதீப் ரங்கநாதன் ரியாக்ஷன்
Watch Video :'வாழை' படம் பார்த்த நடிகர் மற்றும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், மாரி செல்வராஜ் மீது இருந்த மரியாதை அதிகமாகி விட்டது என கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகமே கடந்த சில நாட்களாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படத்தை கொண்டாடி வருகிறார்கள். சிறு வயதில் அவர் கடந்து வந்த சாதி பாகுபாடு, வறுமை இவற்றை மையமாக வைத்து உருவாக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிகரமான விமர்சனங்களை பெற்று வருகிறது. மக்களுக்கு மட்டுமின்றி ஏராளமான பிரபலங்கள் கூட படத்தை பார்த்து கண்கலங்கும் அளவுக்கு படத்தை எடுத்து இருந்தார் மாரி செல்வராஜ்.
இயக்குநர் ராமிடம் அலுவுலக உதவியாளராக இருந்து உதவி இயக்குநராகி பின்னர் 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகமே தன்னை திரும்பி பார்க்கும் அளவுக்கு தரமான ஒரு படத்தை எடுத்து பாராட்டுகளை குவித்தார். அடுத்தது அவர் இயக்கிய கர்ணன், மாமன்னன் என ஒரு சில படங்கள் மட்டுமே என்றாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துவிட்டார். அந்த வரிசையில் 'வாழை' திரைப்படம் அவரை சிம்மாசனத்தில் ஏற்றிவிட்டது.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் கடந்து ஒடுக்கப்பட்டவர்களின் வலி நிறைந்த வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினார். ஏராளமான பிரபலங்கள் வாழ்த்தி வரும் நிலையில் தற்போது கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, லவ் டுடே படம் மூலம் நடிகராக பரிணாமம் எடுத்த இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் 'வாழை' படம் பார்த்த பின்னர் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
நன்றியும் ப்ரியமும் @pradeeponelife bro ❤️❤️ #vaazhai pic.twitter.com/Hggh0cZ1kx
— Mari Selvaraj (@mari_selvaraj) August 27, 2024
"வாழை படம் பார்த்தேன். ரொம்ப சூப்பரா இருந்துச்சு. அந்த படத்தை பார்க்க பார்க்க மாரி செல்வராஜ் மேல இருக்க மரியாதை அதிகமாயிடுச்சு. இது அவருக்கு நடந்த கதை. அவர் எந்த இடத்துல இருந்து இந்த இடத்துக்கு வந்து இருக்காரு அப்படினு யோசிக்கும் போதே வியப்பா இருக்கு. அங்கிருந்து படம் பார்த்து கத்துக்கிட்டு, பின்னாடி இங்க வந்து சினிமாவை முழுசா கத்துக்கிட்டு ஒரு படமா எடுத்து அதன் மூலம் அவருடைய குரலை பதிவு செய்து இருப்பது என அவருடைய சினிமா பயணம் எல்லாமே ரொம்ப வியப்பா இருக்கு. அவர் மேல எனக்கு அளவு கடந்த மரியாதை வந்து இருக்கு. இதுக்கு மேல என்னால வார்த்தையால விவரிக்க முடியல. இப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்" என பேசி இருந்தார் பிரதீப் ரங்கநாதன்.