Dhanush - Manjummel Boys: அப்படிப்போடு.. மாறுபட்ட கதைக்களத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநருடன் இணையும் தனுஷ்?
Manjummel Boys: முன்னதாக தமிழ் ரசிகர்களைக் குறிப்பிட்டு ஸ்பெஷல் நன்றி தெரிவித்து இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் ட்வீட் செய்திருந்தார்.
மலையாள சினிமாவான “மஞ்சும்மல் பாய்ஸ்” (Manjummel Boys) கடந்த பிப்,22ஆம் தேதி சைலண்டாக வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வகையில் ரசிகர்களைக் கவர்ந்து கல்லா கட்டி வருகிறது.
ரூ.100 கோடி வசூல்
சிதம்பரம்.எஸ்.பொதுவால் இயக்கத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்க்கீஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், குணா படமெடுக்கப்பட்ட கொடைக்கானலைச் சேர்ந்த குணா குகை, கண்மணி அன்போடு காதலன் பாடல் ஆகியவற்றின் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களையும் கவர்ந்து தியேட்டர்களில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதுவரை உலக அளவில் ரூ.100 கோடி வசூலை மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ,17 கோடிகளைக் கடந்துள்ளது. முன்னதாக தமிழ் ரசிகர்களைக் குறிப்பிட்டு ஸ்பெஷல் நன்றி தெரிவித்து இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் ட்வீட் செய்திருந்தார்.
சிதம்பரம் பொதுவால் இயக்கத்தில் தனுஷ்..
இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்பட இயக்குநர் சிதம்பரம் அடுத்ததாக நடிகர் தனுஷ் (Actor Dhanush) உடன் கைகோர்ப்பதாக கோலிவுட், மல்லுவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்துக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, படக்குழு சென்னை வந்து நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து பாராட்டுகளைப் பெற்றனர். அப்போது நடிகர் தனுஷையும் இயக்குநர் சிதம்பரம் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் சிதம்பரம் இயக்கத்தில் தனுஷ் நடிப்பதாகவும், கோபுரம் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் வெங்கட் பிரபு பாணியிலான படமாக ஆண் நண்பர்கள் கூட்டத்தை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக அமைந்து ரசிகர்களை ஈர்த்துள்ள நிலையில், அதற்கு மாறாக இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் அமையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல் தனுஷ் மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் பட ரசிகர்கள் என இரு தரப்பினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.