Delhi Ganesh: "முனியாண்டி முதல் சிதம்பரம் வரை" காலத்தால் அழியாத டெல்லி கணேஷ் கதாபாத்திரங்கள்!
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று நள்ளிரவு காலமான நிலையில், மறக்கவே முடியாத அவரது கதாபாத்திரங்களை கீழே விரிவாக காணலாம்.
தமிழ் திரையுலகில் கதாநாயகர்களுக்கு நிகரான அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர்கள் வெகுசிலரே. அவர்களில் டெல்லி கணேஷ் தவிர்க்க முடியாத நடிகர் ஆவார். வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடிக்கக்கூடிய இவர் பாலச்சந்திரன் பட்டறையில் இருந்து வந்தவர்.
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என அனைத்து மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவருடனும் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். இவர் நேற்று இரவு காலமான நிலையில், இவரது நடிப்பில் மறக்கவே முடியாத கதாபாத்திரங்களை கீழே காணலாம்.
முனியாண்டி ( பசி)
காமெடி கதாபாத்திரம் மூலமாக ரசிகர்கள் மனதில் மிகவும் ஆழமாக தடம்பதித்த டெல்லி கணேஷ் 1979ம் ஆண்டு துரை இயக்கத்தில் வெளியான பசி என்ற படத்தில் முனியாண்டி என்ற ரிக்ஷா ஓட்டுனராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்காக அவர் மாநில அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது.
அப்பனாச்சார்யா ( ராகவேந்திரா)
ரஜினிகாந்தின் 100வது படமான ராகவேந்திரா படத்தில் அப்பனச்சார்யா என்ற கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருப்பார்.
மணி ஐயர் ( மைக்கேல் மதன காமராஜன்)
கமல் 4 வேடங்களில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம்் மைக்கேல் மதன காமராஜன். அந்த படத்தில் கமல் நடித்த காமேஸ்வரன் கதாபாத்திரத்தில் அவருடன் இணைந்து மணி ஐயர் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் நகைச்சுவையாக நடித்திருப்பார் டெல்லி கணேஷ். படம் முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியிருப்பார்.
சேதுராம ஐயர் ( அவ்வை சண்முகி)
கமல்ஹாசனின் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அவ்வை சண்முகி படத்தில் ஜெமினி கணேசனின் உதவியாளராக நடித்திருப்பார் டெல்லி கணேஷ். அவரது சேதுராம ஐயர் கதாபாத்திரம் மிகவும் அசத்தலாக இருக்கும். கமலுக்கும் அவருக்கும் நடக்கும் மோதல் ரசிகர்களின் பலத்த கைதட்டலை ரசிகர்கள் மத்தியில் திரையரங்கில் பெற்றது.
பஞ்சபூதம் ( தெனாலி)
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் ஈழத்தமிழராக நடித்து படம் முழுக்க சிரிப்பலையை ஏற்படுத்திய படம் தெனாலி. இந்த படத்தில் மாறுபட்ட நகைச்சுவை வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் டெல்லி கணேஷ். மன நல மருத்துவர் பஞ்சபூதமாக ஜெயராமை பழிவாங்கத்துடிப்பவராக சிறப்பான நடிப்பால் நம்மை சிரிக்க வைத்திருப்பார்.
சிதம்பரம் ( கேடி பில்லா கில்லாடி ரங்கா)
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலின் தந்தையாக சிதம்பரம் என்ற கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படத்தில் நகைச்சுவையான காட்சிகள் பல இருந்தாலும் தன் இளமைக்கால வேதனையை இவர் உருக்கத்துடன் கூறும் காட்சிகள் ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடும். மேலும், இவர் குடித்துவிட்டு ஆட்டம்போடும் காட்சிகள் ரசிகர்களை ரசிக்க வைத்தது.
மூத்த வழக்கறிஞர் ( டெல்லி கணேஷ்)
விஜய் நடித்த தமிழன் படத்தில் டெல்லி கணேஷ் மூத்த வழக்கறிஞராக நடித்திருப்பார். அந்த படத்தில் விஜய்க்கு இவர் சிகரெட்டை நிறுத்து என்று கூறும் காட்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது ஆகும்.
போதைப் பொருள் தடுப்பு அதிகாரி ( அயன்)
அயன் படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து அசத்தியிருப்பார். அந்த படத்தில் 3 நிமிடங்கள் மட்டுமே வரும் காட்சியில் டெல்லி கணேஷ் சூர்யாவைப் பார்த்து பேசும் பய புடிச்சுட்டான்.. எல்லாம் டெக்னாலஜி என்ற டயலாக் இன்று மீம்ஸ் டெம்ப்ளேட்டில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
இதுபோன்று பல படங்களில் மறக்க முடியாத பல கதாபாத்திரங்களை விட்டுச் சென்று மண்ணை விட்டு மறைந்தாலும் இந்த கதாபாத்திரங்கள் வழியாக நம்முடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.