Delhi Ganesh: இந்தியா - பாகிஸ்தான் போரால் நடிகரான டெல்லி கணேஷ் - விமானப்படையை விட்டு வெளியேறியது ஏன்?
Delhi Ganesh: இந்தியா - பாகிஸ்தான் போரால் விமானப்படையில் இருந்த டெல்லி கணேஷ், திரைத்துறைக்கு வந்தது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Delhi Ganesh: டெல்லி கணேஷ் நடிகராவதற்கு முன்பு விமானப் படையில் 10 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
டெல்லி கணேஷ் காலமானார்:
தமிழ்சினிமாவின் பழம்பெரும் நடிகரான டெல்லி கணேஷ் (80), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். கடந்த 1977ம் ஆண்டு தொடங்கிய இவரது திரைப்பயணம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 400 படங்களுக்கும் மேலாக தொடர்ந்தது. சிறந்த குணச்சித்திர நடிகராக கொண்டாடப்படுகிறார். அதேநேரம், இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக, கல்லூரி படிப்பை முடித்த பிறகு தனது 20வது வயது தொடங்கி 30வது வயது வரை 10 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார். அப்போது, ஏற்பட்ட இந்தியா பாகிஸ்தான் போர் காரணமாக தான், டெல்லி கணேஷ் எனும் நடிகரே உருவாகியுள்ளார்.
தூத்துக்குடி டூ விமானப்படை:
சில மாதங்களுக்கு முன்பு ட்யூடியூப் சேனல் ஒன்றிற்கு டெல்லி கணேஷ் பேட்டி அளித்து இருந்தார். அதில் தான் விமானப்படையில் இருந்து சினிமாவிற்கு வந்தது எப்படி என்பதை விளக்கி இருந்தார். அந்த பேட்டியில் பேசிய டெல்லி கணேஷ், “ கல்லூரி படிப்பிற்கு பிறகு மதுரையில் டிவிஎஸ் கம்பெனியில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன். அதேநேரம் டிகிரி முடித்து இருந்ததால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தேன். அதனடிப்படையில் விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான கடிதம் எனக்கு வந்தது. எல்லா சோதனைகளிலும் சிறப்பாக செயல்பட்டு பணியிலும் சேர்ந்தேன். அதன்பிறகு தான் முதன்முறையாக ரயில் ஏறி சென்னை தாம்பரம் வந்தடைந்தேன். உடனே பயிற்சிக்காக பெங்களூருவிற்கு அனுப்பப்பட்டேன். அங்கு ஒரு வருடம் பயிற்சியை முடித்துவிட்டு டெல்லிக்கு சென்று விமானப்படை பணியில் சேர்ந்தேன்.
போர் வீரர்களுக்காக நாடகம்:
அப்போது தான் இந்தியா பாகிஸ்தான் போர் வந்தது. அந்த போரில் ஜம்மு -காஷ்மீர் போன்ற பகுதிகளில், ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் கை, கால் என உடம்பு முழுவதும் பலத்த காயங்களுடன் உயிர்பிழைத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் வலியை மறக்கும் வகையில் கவனத்தை திசைதிருப்ப பொழுதுபோக்கு நடவடிக்கைகளை ஈடுபடுத்த அப்போது பெரிய வசதிகள் இல்லை. ரேடியோ மட்டுமே இருக்க தொலைக்காட்சி போன்ற வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து, முப்படை வீரர்களை தங்களுக்கு தெரிந்த நாடகம் போன்ற திறன்களை கொண்டு, காயமடைந்த வீரர்களை மகிழ்விக்குமாறு உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.
சக பணியாளர்களின் நிர்பந்தத்துடன் வேறு வழியின்றி மேடையேறியபோது எனக்கு நடிப்பில் பெரிய அனுபவமில்லை. அவர்களுக்கு சொன்னதை கேட்டு நடிக்க, என்னுடைய சிரிப்பு பார்வையாளர்களை கவர்ந்தது. 20 நிமிட நாடகம் முடிந்தபிறகு அங்கிருந்த பலரும் என்னை பாரட்டி, இதுதான் இயற்கையான நடிப்பு என ஊக்கப்படுத்தினர். அதன் விளைவாக தான், பொங்கல், தீபாவளி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின்போதும் விமானப்படைக்குள்ளாவே பல்வேறு நாடகங்களை போட்டோம். அப்படி தான் எனது நடிப்பு மேம்படுத்தேன்.
நாடக சபை டூ சினிமா டெல்லி கணேஷ்
நாடகங்களில் எனது நடிப்பை பார்த்து, டெல்லியில் உள்ள தட்ஷன பாரத நாடக சபா எனும் பிரபல நாடகக் குழு எனக்கு வாய்ப்பளித்தது. மனம் ஒரு குரங்கு என்பது பொன்ற பல நாடகங்களில் நடித்து நல்ல பெயர் கிடைக்கவே, அந்த குழுவுடன் சென்னைக்கு வந்தோம். இங்கும் பார்வையாளர்கள் பாராட்டுகளை அள்ளி தெளித்தனர். அதோடு, போரால் ஏற்பட்ட அனுபவங்களால் நாட்டிற்கு செய்த சேவை போதும் என கருதி, விமானப்படையில் இருந்து விலகினேன். டெல்லியில் தொடர்ந்து பல நாடகங்களில் நடித்து, வாழ்க்கை இனிமையாக சென்றது. இருப்பினும் திருமணத்திற்காக நான் சென்னைக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. டெல்லியில் பழகிய தோழியின் உதவியால் அம்பத்தூரில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அதேநேரம், எனது மற்றொரு டெல்லி நண்பரின் நாடக் குழுவில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தொடர்ந்து நடித்து வந்தபோது தான், அந்த நாடகத்தை பார்க்க வந்த இயக்குனர் கே. பாலச்சந்திரன், இயக்குனர் விசுவின் பரிந்துரையின் பேரில் என்னை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்” என டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார்.