Vijay Antony on Twitter: இந்த உலகத்தையே பாம் போட்டு அழிச்சுடுங்க...! விரக்தியின் உச்சத்தில் விஜய் ஆண்டனி..!
கொரோனாவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், உலகத்தையே யாராவது வெடிகுண்டு வீசி அழித்துவிடுங்கள் என்று விஜய் ஆண்டனி விரக்தியுடன் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தனது கோரத்தாண்டவத்தை தொடங்கியுள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டிலும் கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ் திரையுலகின் பிரபல நடிகராகவும், பிரபல இசையமைப்பாளராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “ கொரோனா பணக்காரனை பெரிய பணக்காரனாகவும், ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும். எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிச்சுட்டா நல்லா இருக்கும். வாழ்க வளமுடன்” என்று ஆதங்கமாக பதிவிட்டுள்ளார்.
கொரோனா👽பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,
— vijayantony (@vijayantony) January 10, 2022
எழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்👹
எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி,
உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்🔥
வாழ்க வளமுடன்
கொரானாவால் வேலையிழப்பு, பொருளாதார இழப்பு என்று பலரும் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள நிலையில், விஜய் ஆண்டனியும் கடுமையாக மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருப்பது இந்த பதிவின்மூலம் தெரியவந்துள்ளது. விஜய் ஆண்டனியின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், அவரது பதிவிற்கு கீழ் பலரும் தாங்கள் கொரோனாவால் எதிர்கொண்ட நெருக்கடியை பதிவிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் புதியதாக 13 ஆயிரத்து 990 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் நாட்களில் அரசின் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்படும் என்று தகவல்கள் வௌியாகியுள்ளது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரடங்குகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பலரது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பொது இடங்களில் அச்சமின்றி நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரசை காட்டிலும் வீரியம் மிகுந்த ஒமிக்ரான் வைரசும் பரவுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்