11 Years of Vishwaroopam: ”யார் என்று புரிகிறதா.. இவன் தீ என்று தெரிகிறதா” .. கமலின் விஸ்வரூபம் வெளியான நாள் இன்று!
கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் “விஸ்வரூபம்”. இந்த படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து மிகப்பெரிய சர்ச்சைகளுக்குள்ளான விஸ்வரூபம் படம் வெளியாகி இன்றோடு 11 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
விஸ்வரூபம் படம்
கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் “விஸ்வரூபம்”. இந்த படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன், சக்ரி டோலேட்டி மற்றும் அதுல் திவாரி ஆகியோர் இணைந்து எழுதியிருந்தனர். தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட விஸ்வரூபம் படத்துக்கு ஷங்கர் மகாதேவன்-எஹ்சான்-லாய் இசையமைத்திருந்தனர்.
படத்தின் கதை
விஸ்வரூபம் படத்தில் நடனக்கலைஞராக வரும் கமலை, அவரின் பெண் நளினத்துக்காக வெறுக்கிறார் பூஜா குமார். அவரிடம் இருந்து விவாகரத்து பெற நினைக்கும் நிலையில் கமலுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதா என்பதை அறிய உளவாளியை நியமிக்கிறார். ஆனால் அவரோ அல்கொய்தா தீவிரவாதிகளிடம் மாட்டி கொலை செய்யப்படுகிறார். அந்த உளவாளியை அனுப்பியது யார் என்ற பார்வையில் கமலும் பூஜா குமாரும் சிக்குகின்றனர். இருவரின் புகைப்படமும் தலிபான்களின் தலைவர் ராகுல் போஸூக்கு அனுப்பப்படுகிறது. தான் வரும் வரை அவர்களை கட்டி வைத்திருக்க சொல்லும்போது கமலின் பின்னணி வெளிவருகிறது. அதாவது கமல் ஒரு இஸ்லாமியர். அமெரிக்காவின் ரகசிய உளவாளி என விஷயம் வெளிப்படும். இதனைத் தொடர்ந்து கமல் எடுக்கும் விஸ்வரூபமே மீதிக்கதை.
திரைக்கதையில் மிரட்டிய கமல்
விஸ்வரூபம் படம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கியது. சீசியம் கட்டப்பட்ட கதிர்வீச்சுப் புறாக்கள், அல்கொய்தா பயிற்சிப் பட்டறை, அங்கு இளைஞர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு பயங்கரவாதிகளாக மாற்றப்படும் நிலை என உலக தரத்திலான விஷயங்களை தமிழ் சினிமாவில் எடுத்து மிரட்டியிருந்தார். படம் முழுக்க நவீன உத்திகளை அறிமுகப்படுத்தி வியக்க வைத்திருந்தார்.
கமலுக்கு சரியான வில்லனாக ராகுல் போஸ் நடிப்பு பிரமிக்க வைத்தது. மேலும் கமல் விஸ்வரூபம் எடுக்கும் அந்த ஒன்றை டிரான்மிஷன் காட்சி இன்றும் பலரின் பேவரைட். தமிழ்ப் படங்களில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களை தீவிரவாதிகளாக காட்டியிருந்தாலும் விஸ்வரூபம் படத்தில் அதில் ஒருபடி மேலே சென்று அப்படியே சமூக பொறுப்பு இல்லாத வகையில் சில காட்சிகளை வைத்திருந்தார் கமல். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது, மேலும் முதலில் விஸ்வரூபம் படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு இப்படத்துக்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து பல காட்சிகள் நீக்கப்பட்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த படம் தியேட்டரில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது.
மேலும் விஸ்வரூபம் படத்தின் 2 ஆம் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.