ABP Southern Rising Summit 2023:'ஃபிட்னஸ் பற்றி அட்வைஸ் பண்ண நான் தகுதியான ஆள் கிடையாது' - பாகுபலி வில்லன் நடிகர் ராணா டகுபதி!
ABP Southern Rising Summit 2023: ஃபிட்னஸ் பற்றிய அறிவுறை வழங்க தான் சரியான நபர் இல்லை என்று பிரபல நடிகர் ராணா டகுபதி கூறியுள்ளார்.
ஏபிபியின் ”தெற்கின் எழுச்சி” எனும் தலைப்பிலான ”ABP Southern Rising Summit” கருத்தரங்கு இன்று (அக்.12) சென்னையில் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகளும் அரசியல்வாதிகளும் சினிமா, அரசியலில் பெண்களின் பங்கு மற்றும் 2024 மக்களவை பொதுத் தேர்தல் பற்றிய தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
பாகுபலி வில்லன்:
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ராணா டகுபதி சினிமா அரசியல் மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். பாகுபலி படத்தில் முரட்டுத்தனமான உடலுடன் பல்வாள் தேவன் கதாபாத்திரத்தில் நடித்த ராணா டகுபதியை பெரும்பாலான ரசிகர்கள் தங்களது ஃபிட்னஸ் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இளைய தலைமுறைக்கு ஃபிட்னஸ் குறித்து என்ன அட்வைஸ் கொடுப்பார் என்கிற கேள்விக்கு ராணா கொடுத்துள்ள பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
ராணாவின் ஃபிட்னஸ்!
“என்னைப் பற்றிய ஒரு பொதுவான ஒரு பிம்பம் நான் மிக ஃபிட்டான ஒரு நபர் என்பதே. என்னுடைய வாழ்க்கையில் எந்த தருணத்திலும் நான் ஃபிட்னசை கடைபிடித்தது கிடையாது. நான் நடித்த படங்களில் கதாபாத்திரங்கள் என்னை ஃபிட்டாக இருக்க வலியுறுத்தின. படப்பிடிப்பு நேரங்களைத் தவிர்த்து நான் பெரும்பாலும் எந்த விதமான பயிற்சியும் செய்வதே இல்லை. பாகுபலி மாதிரியான படங்கள் உங்களை அந்த எல்லைக்கு தள்ளும்.
இந்த கதாபாத்திரங்களுக்காக அரைகுறையாக உடற்பயிற்சி செய்து ஓரளவிற்கு உடலை ஃபிட்டாக வைத்திருப்பேன். அது ஒரு சில ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும். அதனால் ஃபிட்னஸ் குறித்து அட்வைஸ் கொடுக்க நான் சரியான நபர் கிடையாது. நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்குத் தேவையான அளவு நான் என்னை ரெடியாக வைத்திருக்கிறேன்.
பாகுபலி படத்தில் பல்வாள் தேவன் கதாபாத்திரத்திற்காக நீங்கள் 5 முதல் ஆறு வருடங்களுக்கு ஒரு நாள் விடாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 3000 கலோரிகள்வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் நீங்கள் ஃபிட்டாக இருப்பீர்கள்” இவ்வாறு அவர் பேசினார்.