குழந்தைகளுக்காக உருகும் ரவி மோகன் ஏன் இதை செய்யவில்லை..கொக்கிப் போட்ட ஆர்த்தி ரவி
உண்மையில் பிள்ளைகளின் உறவு வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், எந்த சக்தியும் அவரைத் தடுத்திருக்க முடியாது என ஆர்த்தி ரவி ரவி மோகனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்

வீட்டோடு மாப்பிளையாக இருந்தாரா ரவி மோகன் ?
வீட்டோடு மாப்பிளையாக இருந்தேன் என்ற அவரின் குற்றச்சாட்டும் பொய்யானது.எங்களுக்கு திருமணமான நாள் முதல் நாங்கள் என் மாமனார்,மாமியாருடன் புகுந்த வீட்டிலும் மற்றும் எங்களுக்கு சொந்தமான ஆழ்வார் பேட்டையிலும்,கிழக்கு கடற்கரை சாலையிலும் உள்ள இரண்டு வீடுகளில் மட்டுமே வசித்தோம்.கொரோனா காலத்தில் நாங்கள் வீடு மாற்றம் செய்த ஓரிரு வாரங்களை தவிர நாங்கள் எப்போதும் என்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியதே இல்லை. எங்கள் பிள்ளைகளை கருவிகளாக்கி என் தாய்மையை அனுதாபத்திற்கு உரியதாக்கி ஆதாயம் தேட நினைப்பவள் நான் அல்ல.என்னை அவ்வாறு நினைப்பவர்கள் உண்மையில் ஒரு தாயின் சிறப்பை உணராதவர்களே!
குழந்தைகளை விட்டு பிரித்து வைத்தாரா ஆர்த்தி ?
கடந்த ஒரு வருட காலத்தில் நான்கு முறை மட்டும் தான் அவர் தன் பிள்ளைகளைச் சந்தித்திருக்கிறார். அதுவும் அவருடைய விருப்பத்தின் பேரில் மட்டுமே! எங்கள் பிள்ளைகள் இன்று படும் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது!அவர்களது தொலைபேசிகள் எப்போதும் உபயோகத்தில் இருந்தும் அவர்களின் அப்பா அழைக்காத காரணம் அவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறது. உண்மையில் பிள்ளைகளின் உறவு வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால், எந்த சக்தியும் அவரைத் தடுத்திருக்க முடியாது. நிச்சயம் வந்து சந்தித்திருப்பார்.எங்கள் குழந்தைகள் அவர்கள் தந்தையை சந்திப்பதை மிகவும் விரும்புகிறார்கள், ஆனால் அவர்களது தந்தை வழி பாட்டி-தாத்தா வீடு அல்லது எங்கள் அலுவலகம் போன்ற நன்கு அறிந்த பொது இடங்களில் அப்பாவை சந்திக்கும் போது மட்டுமே பாதுகாப்பாக உணர்கிறோம் என்று தெளிவாகச் சொல்கிறார்கள்:அதை விட்டு யார் எங்கள் பிள்ளைகளின் மன அமைதியைப் பறித்தாரோ அவர் வாழும் இடத்தில் அவர்களின் தந்தையைச் சந்திக்க நிர்பந்தப்படுத்தப்படுவது, அவர்களை மேலும் அவர்கள் தந்தையை விட்டு விலகச் செய்துவிட்டது. குழந்தைகளை அவரிடம் இருந்து அப்புறப்படுத்தியுள்ளேன் என உருகும் அவர், அவர்களை சந்திக்கவோ அல்லது அவர்களை தன் பொறுப்பில்
ஒப்படைக்கும் படியோ சட்டப்பூர்வமாக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை.
விபத்து நடந்தபோது சொல்லாதது ஏன் ?
என் கணவர் வெளிநாட்டில் தொடர்பு கொள்ள இயலா நிலையில் இருந்த போது இங்கு நடந்த ஒரு சிறு கார் விபத்து, ஆண்டவன் அருளால் என் குழந்தைகளுக்கு எந்த துன்பமும் ஏற்படுத்தாத அந்த விபத்தில் சேதமடைந்த காரை சரி செய்ய இன்சூரன்ஸ் ஆவணங்கள் தேவைப்பட்டன. அதை எடுத்துக்கொள்ள எங்கள் இருவருக்கும் சொந்தமான அலுவலகத்துக்கு சென்றேன் .ஆனால் என்னை உள்ளே கூட நுழைய விடாமல் காவலர்கள் வெளியேற்றினார்கள்.சட்டப்படி எனக்கும் உரிமையுள்ள ஒரு இடத்திலிருந்து அவமானப்படுத்தி அனுப்பட்டேன் என்பது தான்.
அனைத்து வடிவத்திலும் என்னால் துன்புறுத்தப் பட்டதாக சொல்கிறார்! மனம் வலிக்கிறது.திரையில் யாருக்கும் அடங்க மறுக்கும் ஒரு நாயகனை,நிஜத்தில் ஒரு பெண் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறுவதைக் கேட்கும் போது வேதனையில் சிரிப்புதான் வருகிறது. அப்படியே அவர் என் கட்டுப்பாட்டில் இருந்திருந்தாலும், அது அவரது விருப்பத்தினால் தான் இருந்திருக்க முடியுமே தவிர, கட்டாயத்தினால்
அல்ல.





















