24 years of Minsara Kanna: ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த கரெண்ட் ஷாக்... 24 ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஜிவ்வென இருக்கும் "மின்சார கண்ணா''
ரொமான்ஸ், செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக வெளியான 'மின்சார கண்ணா' மசாலா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
"உன் பெயர் சொல்ல ஆசை தான்..." 90ஸ் கிட்ஸ்களின் மோசட் பேவரட் பாடல்களின் ஒன்றான மனதை வருடும் இந்த பாடல் நிச்சயம் காதலர்களின் தேசிய கீதமாகவே இருந்தது. 1999ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், குஷ்பூ, ரம்பா, மோனிகா, மணிவண்ணன், மன்சூர் அலிகான், ஆர். சுந்தர்ராஜன், கோவை சரளா உள்ளிட்டோரின் நடிப்பில் ரொமான்ஸ், செண்டிமெண்ட், காமெடி, ஆக்ஷன் என அனைத்தின் கலவையாக வெளியான 'மின்சார கண்ணா' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 24 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
மின்சார கண்ணா:
கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் ஆண்களை அறவே வெறுக்கும் குஷ்பூ மிக பெரிய தொழிலதிபராக மிகவும் கம்பீரமாக வாழ்ந்து வருகிறார். தன்னை சுற்றிலும் பெண்களே இருக்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டு வாழ்பவர். குஷ்பூவின் தங்கையாக மோனிகா பணக்கார திமிரில் அகம்பாவதோடு ஜெர்மனியில் படித்து வருகிறார். அவருக்கும் கோடீஸ்வரனாக மணிவண்ணன் மகன் விஜய்க்கும் காதல் மலர்கிறது. ஆண்களையே வெறுக்கும் அக்காவுக்கு உண்மை தெரிந்தால் கதை கந்தல் என குழப்பத்தில் இருந்த காதலிக்காக ஒரு ஏழையை போல விஜய்யின் மொத்த குடும்பமும் குஷ்பூவை தேடி வருகிறது.
ஆண்களை தன்னை சுற்றி எந்த ஒரு இடத்திலும் வைத்து கொள்ளாத குஷ்பூ எப்படியோ விஜய்யை மட்டும் ஏற்று கொள்கிறார். படிப்படியாக குடும்பத்தையும் சமையல்காரர், வீடு காவலாளி என உள்ளே சேர்த்து கொள்ள வைக்கிறார். விஜய்யின் ஒட்டுமொத்த குடும்பமும் விஜய் - மோனிகா காதலுக்காக பாடுபடுகிறது.
மெகா ஹிட்:
இடையில் குஷ்பூவின் பி.ஏவாக இருக்கும் ரம்பா விஜய்யை ஒரு தலையாக காதலிக்கிறார், டூயட் பாடுகிறார். இறுதியில் விஜய்யின் சுயரூபம் குஷ்பூவுக்கு தெரிந்ததா? விஜய் - மோனிகா காதல் என்ன ஆனது? ஆண்களை பற்றின குஷ்பூவின் எண்ணம் மாறியதா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
விஜய் வித்தியாசமான கோணத்தில் நடித்த இப்படத்தை அவரின் ரசிகர்கள் கொண்டாடினர். காதல் என்று வந்து விட்டால் கூலான காதலனாகவும், காமெடி என்றால் சேட்டை செய்யும் நடிகராகவும் ஃபைட் என்றால் மாஸாக டஃப் கொடுக்கும் கலக்கலான மின்சார கண்ணணாகவும் விஜய் அசத்தலாக நடித்து இருந்தார்.
தேவாவின் இசையில் கவிஞர் வாலி மற்றும் நா. முத்துக்குமார் வரிகளில் பாடல்கள் உன் பெயர் சொல்ல ஆசை தான், ஊதா ஊதா ஊதா பூ, ஓ அங்கிள் ஓ அங்கிள்... என அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன. வழக்கமான காதல் கதையாக இல்லாமல் சற்று வித்தியாசமான காதல் கதையாக அமைந்த 'மின்சார கண்ணா' திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.