Telangana Next CM: தெலங்கானாவில் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரசில் இழுபறி - 3 பேர் இடையே கடும் மோதல்
Telangana Next CM: தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையை பெற்று இருந்தாலும், அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் காங்கிரசில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.
Telangana Next CM: தெலங்கானாவின் அடுத்த முதலமைச்சர் பதவியை பெற ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மூன்று பேரிடையே கடும் இழுபறி நீடிக்கிறது.
தெலங்கானா சட்டமன்ற தேர்தல்:
நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் காங்கிரசுக்கு பெரும் ஏமாற்றமாகவே அமைந்துள்ளது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், தெலங்கானாவில் மட்டும் முதன்முறையாக ஆட்சியை உறுதி செய்தது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் பெரும்பானமைக்கு தேவையானதை விட அதிகமாக, அதாவது மொத்தமாக 64 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் உத்வேகத்தில் இருந்த பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரேவந்த் ரெட்டி:
தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு, கடந்த 2021ம் ஆண்டு முதல் அக்கட்சியின் மாநில தலைவராக உள்ள ரேவந்த் ரெட்டி தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அவர் மேற்கொண்ட பரப்புரை திட்டங்களும், கட்சியை வலுப்படுத்த முன்னெடுத்த நடவடிக்கைகளும் தான் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன என்றும் பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர். இதனால், தெலங்கானா மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக ரேவந்த் ரெட்டியை தான் காங்கிரஸ் தலைமை தேர்ந்தெடுக்கும் என கருதப்பட்டது. ஆனால், தற்போது முதலமைச்சர் யார் என்பதை தேர்ந்து எடுப்பதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது.
முதலமைச்சர் பதவிக்கு 3 பேர் போட்டி:
தெலங்கானாவின் அடுத்த முதலமைச்சருக்கான வேட்பாளர்களில் ரேவந்த் ரெட்டி முதல் நபராக இருக்கிறார். அடுத்தபடியாக, கே.சி.ஆரை வீழ்த்த காங்கிரஸின் தீவிர பரப்புரையில் மற்றொரு முக்கிய முகமாக திகழ்ந்தவர் அக்கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவரான மல்லு பாட்டி விக்ரமார்கா. இவர் தேர்தலுக்கு முன்னதாக மாநிலம் முழுவதும் 1,400 கி.மீ., பாதயாத்திரையை மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்தார். மாநிலத்தில் காங்கிரஸின் மறுமலர்ச்சியை உறுதி செய்வதில் 62 வயதான விக்ரமார்க்காவின் 'மக்கள் அணிவகுப்பு' முக்கிய பங்கு வகித்தது. ஜூலை 2021 வரை காங்கிரஸின் தெலங்கானா பிரிவின் தலைவராக இருந்தவர் உத்தம் குமார் ரெட்டி. மாநிலத்திலுள்ள கட்சித் தொண்டர்களிடையே மிகவும் பிரபலமான இவரும், முதலமைச்சர் பதவிக்கு பரிசீலிக்கப்படும் நபர்களில் ஒருவராக இருக்கிறார்.
காங்கிரசின் முடிவு என்ன?
தெலங்கானாவின் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடகாவின் துணை முதலமைச்சருமான சிவக்குமார், “காங்கிரஸ் கட்சியின் கூட்டு தலைமை முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்யும். கட்சித் தலைமையிடம் பேசியுள்ளேன், மேலும் எங்களது வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவதற்கான வழியை நாங்கள் உருவாக்கியுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார். இதனால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் டெல்லிக்கு சென்று தெலங்கானாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.