Jothi venkatesan Profile: சாதாரண கவுன்சிலர் மனைவி To மக்களவை வேட்பாளர்..! காஞ்சிபுரத்தில் கலக்குவாரா ஜோதி ?
Kanchipuram PMK candidate Jothi Venkatesan : காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளராக ஜோதி வெங்கடேசன் பாமக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளார்
பாமக வேட்பாளர் பட்டியல்
அரசியல் கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக மற்றும் திமுக தரப்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இம்முறை அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் இறுதியாக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.
பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 10 இடங்கள் பாமகவிற்கு கிடைத்துள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் - கவிஞர் திலகபாமா
- அரக்கோணம் - கே.பாலு
- ஆரணி - கணேஷ் குமார்
- கடலூர் - தங்கர் பச்சான்
- மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார்
- தருமபுரி - சௌமியா அன்புமணி
- சேலம் - அண்ணாதுரை
- விழுப்புரம் - முரளி சங்கர்
- காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேசன்
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் மூன்று பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மேலும் பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் என மூன்று சமுதாயத்தை சேர்ந்த பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தனி தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது
காஞ்சிபுரம் வேட்பாளர் அறிவிப்பு
முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் காஞ்சிபுரம் தொகுதி விடுபட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட, மூன்று வேட்பாளர்கள் முயற்சி செய்து வந்ததால் கட்சி தலைமை முடிவெடுக்க தாமதமானதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளிடம் வற்புறுத்தி உள்ளார். அதேபோன்று பிற மாவட்டத்தை சேர்ந்த இன்னொரு வருகும் வேட்பாளருக்காக போட்டியிட்டு உள்ளனர். இந்த நிலையில் தான் திருவள்ளூர் மாவட்டம் முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்பொழுது திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளராக உள்ள கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன் என்பவரின் மனைவி ஜோதிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜோதி வெங்கடேசன்
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி வெங்கடேசன். இவரது கணவர் வெங்கடேசன் பாமகவின் திருவள்ளூர் மாவட்ட அமைப்பு செயலாளராக பதவி வகித்து வருகிறார். கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ஆகவும் பணியாற்றி வருகிறார். அன்பழகி மற்றும் தர்ஷினி ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவற்றில் அன்பழகி இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது. வெங்கடேசன் கட்சி தலைமைக்கும் கட்சி நிர்வாகிகளிடமும் செல்வாக்கு உள்ள நபராகத் தெரிகிறார். வெங்கடேசன் ஜோதியை காதல் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாமகவின் நம்பிக்கை
சென்னை புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற தொகுதியில் பாமக செல்வாக்காக இருக்கக்கூடிய தொகுதியாக காஞ்சிபுரம் திகழ்ந்து வருகிறது. காஞ்சிபுரம் நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதியிலும் கணிசமான, வாக்கு வங்கியை பாமக பெற்று உள்ளது. பாஜக சமீப காலமாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் வளர்ந்து வருகிறது. இதேபோன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அணியினருக்கு கணிசமான ஆதரவு உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கி, தேசிய கட்சிகள் கூட்டணியில் அதிமுக இல்லாததால், தங்களுக்கு திமுக எதிர்ப்பு வாக்குகளும் கிடைக்கும் என பாமகவினர் நம்புகின்றனர். எப்படியும் இந்த தொகுதியில் வென்றாக வேண்டும் என பணியாற்று உள்ளதாக பாமக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.