Local Body Election | அமைச்சர் மஸ்தான் பெயரை மானஸ்தன் என படித்துவிட்டேன் - திமுகவின் குடும்ப அரசியலை சீண்டிய அண்ணாமலை
’’மஸ்தானின் மனைவி, மகனுக்கும் வார்டு உறுப்பினர் பதவிக்கு சீட்டு வழங்கி உள்ளார்; கோபாலபுரம் மாடல் பட்டி தொட்டி எல்லாம் கடந்து பேரூராட்சி வரை கலந்துள்ளதற்கு இதுவே சான்று’’
வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்பூற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பரப்புரை களம் சூடுபிடித்துள்ளது. விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் பாஜக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார், அப்போது பேசிய அவர், விழுப்புரத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் வந்திருக்கிறது என்றால் நிச்சயமாக வாய்ப்பு கிடையாது, அப்படியேதான் இருக்கிறார்கள். நடுத்தர குடும்பத்தினர் நடுத்தர குடும்பத்தினர் ஆகவே இருக்கிறார்கள், ஏழை மக்கள் ஏழையாகவே இருக்கிறார்கள், வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் பார்க்காமல் பெரிய கட்சி, பெரிய கட்சி என்று வாய்ப்பளித்து எந்த மாற்றமும் என்னை பொறுத்தவரை ஏற்படவில்லை, நீங்களும் அதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
ஆனால் பாஜக அப்படி இல்லை 8 ஆண்டுகளில் பாரத பிரதமர் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது மத்திய அரசுதான் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பாக ஒரு கழிப்பறை கூட எந்த வீடுகளிலும் இல்லை கழிப்பறை கட்டுவதற்கு தாஜ்மஹால் கட்டுவது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள், 2014ஆம் ஆண்டில் இருந்து 57 லட்சம் கழிப்பறைகள் இலவசமாக மத்திய அரசு சார்பில் கட்டி தந்திருக்கிறது.
நீங்கள் ரேஷன் கடையில் வாங்குகின்ற அரிசி மத்திய அரசு 42 ரூபாய்க்கு வாங்கி 2 ரூபாய்க்கு தருகிறது, அந்த இரண்டு ரூபாயை கொடுத்துவிட்டு தாங்களே கொடுப்பது போன்று மஞ்சள் பையில் ஸ்டிக்கர் அடித்து கொடுக்கிறார்கள் முதல்வர் ஸ்டாலின். கொரோனா காலகட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின் நகைகடன் வழங்கப்படும் என கூறி தாய்மார்களின் நகைகளை அடகு வைக்க செய்து விட்டனர், ஆனால் தற்போது சினிமா பட பாணியில் சட்டசபையில் தமிழக முதல்வர் தனது பாக்கெட்டில் கை விட்டு எங்களிடம் ஒன்றுமில்லை என்று கூறுகிறார்.
அதே போல மாதம் ஆயிரம் ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டால் இன்னும் நான்கு வருடம் இருக்கிறது என்று கூறுகிறார்கள், நான்கு வருடத்தில் அவர்கள் இருக்க வேண்டும் ஏனென்றால் 8 மாத கால ஆட்சியில் 80 ஆண்டு கால ஆட்சியை போல் மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது, அவ்வளவு சலிப்பு திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது மக்களுக்கு இருக்கிறது. நேற்று பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு எதற்காக பெட்ரோல் குண்டு வீசினர் என கேட்டால் அண்ணாமலை நீட்டுக் ஆதரவாக பேசி விட்டார் என்று கூறுகின்றனர்.
இந்த மாவட்டத்தில் செஞ்சி பகுதியில் இருக்ககூடிய அமைச்சர் மஸ்தான் என்று ஒருவர் இருக்கிறார். நான் கூட அவரது பெயரை படிக்கும் போது மானஸ்தன் என்று படித்து விட்டேன் ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அவரது மனைவிக்கு வார்டு உறுப்பினர் கொடுக்கிறார், அதேபோல அவரது மகனுக்கும் வார்டு உறுப்பினர் பதவிக்கு சீட்டு வழங்கியுள்ளார், கோபாலபுரம் மாடல் இப்போது தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் கடந்து பேரூராட்சி வரை கலந்திருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
திமுகவை போன்று பாரதி அரசியல் செய்யும் பயிற்சி அல்ல பாஜக மக்களின் வலியை முழுமையாக உணர்ந்த வேட்பாளர்கள் பாஜக சார்பில் களம் காண்கின்றனர். உங்களுக்காக உள்ளாட்சியில் நல்லாட்சி பெற வேண்டுமென்றால் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என கூறினார். பின்னர் விழுப்புரம் மாவட்டத்தில் பிஜேபி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.