காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு... வாகனம் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற திமுக வேட்பாளர் மனைவி... நொந்தவாசியான வந்தவாசி!
Vandavasi Urban Local Body Election 2022: அப்போது வேட்பாளர் மகேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி திடீரென அவ்வழியாக வந்த வாகனத்தின் டயர் அடியில் புகுந்து தற்கொலைக்கு முயன்றார்.
வந்தவாசியில் திமுகவிற்கு ஒதுக்கிய வார்டை திடீரென காங்கிரஸிற்கு ஒதுக்கியதால் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேட்பாளரின் மனைவி சாலையில் சென்று கொண்டு இருந்த வாகனத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகர மன்றத் தேர்தலில் 22வது வார்டில் திமுக சார்பில் மகேந்திரன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று முடிவடைந்த நிலையில், திடீரென 22 வது வார்டை கூட்டணி கட்சியான காங்கிரசிற்கு ஒதுக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த மகேந்திரனை வாபஸ் பெறும்படி திமுக சார்பில் தெரிவிக்கபட்டது.
இதனால் ஆத்திரமடைந்த திமுக வேட்பாளர் மகேந்திரன், அவரது மனைவி பாக்கியலட்சுமி மற்றும் ஆதரவாளர்களுடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்து சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமாரிடம் முறையிட்டனர். ஆனால் அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கவில்லை. ‛கட்சி கூறியபடி வாபஸ் பெறுங்கள்’ என்று எம்.எல்.ஏ., கூறியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய வேட்பாளர் மகேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வந்தவாசி ஆரணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது வேட்பாளர் மகேந்திரன் மனைவி பாக்கியலட்சுமி திடீரென அவ்வழியாக வந்த வாகனத்தின் டயர் அடியில் புகுந்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், மறியலில் ஈடுபட்ட அனைவரையும் அழைத்து பேசி சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் 22 வது வார்டில் திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் இல்லையென்றால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று வேட்பாளர் மகேந்திரன் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடும் நிலையில், அதை மீறி திமுக அங்கீகார கடிதம் வழங்குமா என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் ,இன்று மாலைக்குள் இறுதி வேட்பாளர் வெளியாக உள்ளதால், அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம் என திமுக வேட்பாளர் தற்காலிகமாக சமாதானம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. திமுகவினரின் மறியலால் அப்பகுதியே களேபரமாக காட்சியளித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்