Trichy Corporation Election 2022 : “ரேஷன் கடையில் நின்று பாருங்கள்... அப்போது தெரியும்” - ஸ்டாலின், உதயநிதியை வசைபாடிய எடப்பாடி
நீட் தேர்வை குறித்து பொதுவான இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நாங்கள் விவாதிக்க தயார். அதற்கு மக்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு வழங்கட்டும்- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி திருச்சி மன்னார்புரம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது.. "நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற அனைவரும் உழைத்திட வேண்டும். எத்தனை துறை இருந்தாலும், உள்ளாட்சி துறை என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறையாக உள்ளது. தி.மு.க. தனது 9 மாத கால ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்திருக்கிறது. கொள்ளையடிப்பதை தவிர மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரம் செய்த போது, அதில் எனக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் சவால் விடுக்கிறார். அந்த சவாலை நாங்கள் ஏற்கிறோம். நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது யார், எந்த ஆட்சியில் அந்த நச்சு விதை யாரால் ஊன்றப்பட்டது என்பது குறித்து பொதுவான இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நாங்கள் விவாதிக்க தயார். அதற்கு மக்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பு வழங்கட்டும். அப்போது எது உண்மை என்று மக்களுக்கு தெரியும்.
இதனை தொடர்ந்து கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்திட்டு ரத்து செய்து விடுவோம் என்று மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால் இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. தேர்தலின் போது 525 தேர்தல் வாக்குறுதிகள் தந்தார். பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித்தொகை, சிலிண்டருக்கு ரூ.150 மானியம், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி என கூறினார். ஆனால் அதில் தற்போது 400 வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகிறார். இது எவ்வளவு பெரிய பச்சை பொய். மக்களை ஏமாளி என்று மு.க.ஸ்டாலின் நினைக்கக்கூடாது. பொய் பேசுவதில் மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கினால் பொருத்தமானதாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எனக்கு தெரியும் என்றார். அந்த ரகசியத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்து இருக்கலாம் என்று தற்போது மக்கள் கேட்கிறார்கள். அதற்கு முதலில் நீங்கள் பதில் சொல்லுங்கள்.
தி.மு.க. அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருந்தன. கோதுமை மாவில் வண்டு விளையாடியது. புளியில் பல்லி செத்து இருந்தது. வெல்லம் உருகி ஓடியது. ஆனால், இந்த அரசு திறமையான அரசு என்று அவர்களாகவே கூறுகிறார்கள். அவர்கள் ரேஷன் கடை முன்பு நின்று பார்க்கட்டும். மக்கள் அவர்களை பற்றி எப்படி கூறுகிறார்கள் என்று கேட்கட்டும். இந்த ஆட்சியில் எந்த அமைச்சரும் தலைமைச் செயலக அறையில் இருப்பது இல்லை. இலாகாக்களில் அபகரித்து எதில் முதலீடு செய்யலாம் என்ற நோக்கத்துடன் இருக்கின்றனர். மேலும் தமிழகத்தில் சில அரசியல் கட்சி தேர்தல்களில் திமுக சின்னத்தில் போட்டியிடுவது வெட்கமாக உள்ளது என்றார். அவர் அவர் கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் தான் அது பெருமையாக இருக்கும். ஆனால் திமுக கூட்டனியில் அப்படியில்லை என்றார். உதநிதியும், ஸ்டாலினும் மாறி மாறி மக்களிடம் பொய் பேசி வருகிறார்கள் இது எதுவும் மக்கள் மத்தியில் செல்லாது. வருகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல், குறைகளை மக்கள் மத்தியில் எடுத்து கூறி வாக்கு சேகரிங்கள் என்றார். மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்திடுவதற்கு அச்சாரமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.