ஜி.எஸ்.டி. பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது - பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சனம்
பத்தாண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை பாஜக செய்துள்ளது மாநில செயலாளர் எஸ் .ஜி. சூர்யா
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கை
நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் , கடந்த 10 ஆண்டுகள் செய்த சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியானது. இந்த நிலையில் இது தொடர்பாக காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாநிலச் செயலாளர் எஸ் .ஜி. சூர்யா பாஜக தேர்தல் அறிக்கை தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். முன்னதாக திராவிட மாடல் சாதனைகள் என்ற பெயரில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் குற்றச்சாம்பவங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார் .
இதன் அடுத்த செய்தியாளர்களிடம் பேசியதாவது, கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் பல்வேறு நல திட்டங்களை செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கு எண்ணற்ற திட்டங்களை தொகுதி வாரியாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளில், 576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 35 ஆயிரம் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு 7 ஆயிரத்து 895 சாலையோர வியாபாரிகளுக்கு 13 கோடியே 82 லட்ச ரூபாய் கடன் வழங்கப்பட்டது. 6 ஆயிரத்து 689 வீடுகளில் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 59 இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தூய்மை இந்தியா திட்டத்தின் 1860 வது இடத்தில் உள்ளது. 48.93 கோடி ரூபாய் நகர்ப்புற திட்டத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளது. 37 ஆயிரத்து 752 வீடுகளுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 463 சுய உதவிக் குழுக்களுக்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 2000 கோடி ரூபாய் கடனாகவும் மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக உள்ளது
தேர்தல் அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், ஒரு ஹோட்டலில் வரி போட்டால் , அதில் பாதி வரிப்பணம் மத்திய அரசுக்கும் மீதி வரி பணம் மாநில அரசிற்கும் செல்கிறது. ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு ஓட்டல்களில் 17 சதவீதம் வரி இருந்தது. ஜிஎஸ்டி மூலம் கொள்ளையடிப்பதாக ஸ்டாலின் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரி விலக்கு
காஞ்சிபுரம் நெசவாளர்கள் ஜரிகை ஜிஎஸ்டி வரி விலக்கு கேட்கிறார்கள் அது குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில் , ஜிஎஸ்டி தொடர்பான கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு நெசவாளர்களுக்கு என்ன தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டு , தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அவர்களுடைய கோரிக்கைகள் பெறப்பட்டு அதை முழுமையாக நிவர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளையும் பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்யும் என கூறினார்.
பெரிய விஷயமாக பார்க்கவில்லை
தேர்தல் அறிக்கை கடைசி நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், நாங்கள் செய்த பத்து ஆண்டுகள் நல்லாட்சிதான் எங்களுடைய சாதனை. காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் வெளியிட்டது தற்பொழுது நாங்கள் வெளியிட்டுள்ளோம். ஒன்றரை மாதங்கள் தேர்தல் நடைபெற உள்ளதால், இதை பெரிய விஷயமாக பார்க்கவில்லை. எந்த வகையில் இந்த ஆட்சி தொடர போகிறது என்பது குறித்து உறுதிமொழி பத்திரம் தான் இது.
நாங்கள் தொடர்ந்து இதை சமூக வலைத்தளங்கள், பத்திரிகை ,தொலைக்காட்சி மூலமாக மக்களிடம் கொண்டு செல்வோம் . மேலும் நேரடியாக துண்டு பிரசுரங்கள் வழங்கி மக்களிடம் அதை கொண்டு செல்லும் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். அதேபோன்று நடைமுறையில் சாத்தியம் இல்லாத விஷயங்களை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அவர்கள் கூறும் இலவசங்கள் தொடர்பான திட்டங்களை நிறைவேற்ற முடியாது என குற்றம்சாட்டினார் .