ADMK EPS: கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டும் எடப்பாடி? கொங்கின் கிங், வஞ்சகமா? எதிர்காலத்திற்கான ஸ்கெட்ச்
ADMK EPS TN Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிபெற மிகவும் குறைவான வாய்ப்புள்ள தொகுதிகள் அனைத்தையும், கூட்டணி கட்சிகளுக்கு உள்நோக்கத்துடன் எடப்பாடி ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

ADMK EPS TN Election 2026: அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கியதில் எதிர்காலத்திற்கான திட்டங்கள் இருப்பதாகவும் ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக கூட்டணி - அடங்காத சலசலப்பு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிரதான எதிர்க்கட்சிகளான அதிமுக தலைமையிலான கூட்டணி, தொகுதிப்பங்கிட்டை இறுதி செய்துள்ளது. சில தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், சில தொகுதிகளை வேண்டுமென்றே உள்நோக்கத்துடனும், நீண்ட காலத்திற்கான திட்டமாகவும் கூட்டணி கட்சிகளுக்கு எடப்பாடி ஒதுக்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக அமைச்சர்களின் தொகுதிகள் பெரும்பாலானவற்றை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது, அதிமுகவை காட்டிலும் பாஜகவிடம்நெருக்கம் காட்டும் கட்சிகளுக்கான தண்டனை என எடப்பாடியின் ஆதரவாளர்கள் தரப்பில் பேசப்படுகிறது.
எடப்பாடி வாரி வழங்கிய தொகுதிகள்
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு 27, பாமகவிற்கு 18, அமமுகவிற்கு 11 மற்றும் தமிழ்மாநில காங்கிரசுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதுபோக சில சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல தொகுதிகளில் இருந்து தான், திமுகவின் ஏராளமான அமைச்சர்கள் சிட்டிங் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். இதனால், அந்த தொகுதிகளில் அதிமுக கூட்டணியின் வெற்றி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தை தவிர்த்து பாஜக சின்னத்தில் போட்டியிடுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கூட்டணி கட்சிகளை குழியில் தள்ளிய எடப்பாடி..!
பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் தொகுதிகள்: அமைச்சர் பெரியகருப்பன் (திருப்பத்தூர்), அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்) அமைச்சர் எ.வ.வேலு (திருவண்ணாமலை), அமைச்சர் மனோ தங்கராஜ் (பத்மநாபபுரம்), நாசர் (ஆவடி), அமைச்சர் மதிவேந்தனின் ராசிபுரம் ஆகிய தொகுதிகளோடு, சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரமும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாமக, அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் தொகுதிகள்: அமைச்சர் ராஜேந்திரன் (சேலம் வடக்கு) தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மன்னார்குடி, அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சைதாப்பேட்டை, அமைச்சர் கே.என்.நேருவின் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளும் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமாகாவிற்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் தொகுதிகள்:
அமைச்சர் முத்துசாமியின் ஈரோடு மேற்கு தொகுதி, அமைச்சர் ஆர்.காந்தியின் ராணிப்பேட்டை அமைச்சர் சக்கரபாணியின் ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகள் தமிழ் மாநில காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோக கடந்து 30 ஆண்டுகளாக திமுக வென்று வரும் தஞ்சை, 20 ஆண்டுகளாக காங்கிரஸ் வென்று வரும் கிள்ளியூர் தொகுதியும் ஜி.கே. வாசன் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் குன்னம் தொகுதி, இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (பாரிவேந்தர்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோக, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தொகுதியான மதுரை மத்திய தொகுதி, ஏ.சி, சண்முகத்திற்கு ஒதுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் நீண்டகாலமாக அதிமுகவால் கூட வெற்றிக்கனியை பறிக்கமுடியாத நிலையில், தற்போது அவை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

எடப்பாடியின் வஞ்சகமா?
கூட்டணி கட்சிகளின் வலுவிற்கு ஏற்ப தொகுதிகளை ஒதுக்க எடப்பாடி பழனிசாமி தாராளமாக முன்வந்துள்ளார். ஆனால், தாமரை சின்னத்தில் கூடுதல் வேட்பாளர்களை களமிறக்க பாஜக கொடுத்த அழுத்தம், தேமுதிக இல்லாததால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அமமுக கொடுத்த குடைச்சல் ஆகியவை எடப்பாடியை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாகவே, எண்ணிக்கை உங்கள் விருப்பப்படி இருக்கும் ஆனால், தொகுதிகள் எனது விருப்பமே என கறாராக கூறி வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள தொகுதிகள் பலவற்றை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளார். அதற்கு உதாரணமாக தான், பாஜக பலமாக உள்ளதாக கருதப்படும் சென்னை மற்றும் கோவை மாவட்டங்களிலேயே தலா ஒரு தொகுதிகளை மட்டுமே வழங்கியுள்ளார்.
கொங்கின் கிங் ஸ்கெட்ச்..
அதோடு, தனக்கு போட்டியாக கொங்கு மண்டலத்தில் மற்றொரு தலைமையாக வளர்ந்து வரும் அண்ணாமலையை முடக்க, அவரது சொந்த கரூர் மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட பாஜகவிற்கு ஒதுக்கவில்லை. கோவையிலும் ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியுள்ளதால், இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவது என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் அதிமுகவை காட்டிலும் பாஜகவிடம் நெருக்கம் காட்டி தனக்கான வேலைகளை செய்துகொள்வதோடு, இரட்டை இலை சின்னத்தை கடந்து தாமரையை தேர்வு செய்த தமிழ் மாநில காங்கிரசுக்கு பாடம் புகட்டும் விதமாகவே, வெற்றிக்கு வாய்ப்பே இல்லாத 5 தொகுதிகளை அந்த கட்சிக்கு எடப்பாடி ஒதுக்கியுள்ளாராம்.
எதிர்காலத்திற்கான திட்டமா?
இதனிடையே, தவெக தலைவர் விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படும் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் தொகுதியை யாரும் எதிர்பாராத விதமாக பாமகவிற்கு ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் விஜய்க்கான வெற்றி வாய்ப்பை சற்றே அதிகரித்து கொடுத்து, எதிர்காலத்தில் அவருடனான கூட்டணிக்கான அச்சாரத்தை போட்டுள்ளாராம். அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்குவதை காட்டிலும், கேட்கும் எண்ணிக்கையிலான தொகுதிகளை உறுதி செய்து, கடினமான தொகுதிகளை கழித்துகட்டுவதே நல்லது என இந்த முடிவை அதிமுக தலைமை எடுத்ததாம். இதையடுத்து கைவசம் உள்ள 169 தொகுதிகளில் சரியான வேட்பாளர்களை தேர்வு செய்து, வெற்றி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான பணிகளை எடப்பாடி முடுக்கிவிட்டுள்ளாராம்.
ட்ரெண்டிங் செய்திகள்




















