Urban Local Body Election: அதிமுகவில் அண்ணன்... திமுகவில் தம்பி மனைவி... திருப்போரூரில் மோதல் போர்!
Thiruporur Urban Local Body Election 2022: அதிமுகவின் நகராட்சி தலைவர் வேட்பாளராகவும் அவர் களம் காண்கிறார். இதனால், அவர் அந்த வார்டில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டில் அனைத்து கட்சி சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 4 வது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த தணிகாசலம் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுகவின் நகராட்சி தலைவர் வேட்பாளராகவும் அவர் களம் காண்கிறார். இதனால், அவர் அந்த வார்டில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பிற அதிமுக வேட்பாளர்களையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருகிறார். ஆனால், அதே நேரத்தில் அவரது குடும்பத்தில், அவரது தம்பியான ஏழுமலை என்பவர், துவக்கத்தில் இருந்து திமுகவில் இருந்து வருகிறார். இந்த தேர்தலில் அவர் போட்டியிட இருந்த நிலையில், சம்மந்தப்பட்ட வார்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தனக்கு பதில் தனது மனைவி பத்மாவதிக்கு சீட் கேட்டு விண்ணப்பத்தார். திமுக தரப்பில், 3வது வார்டில் பத்மாவதிக்கு சீட் ஒதுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளராக 3வது வார்டில் பத்மாவதி போட்டியிடுகிறார். 4வது வார்டில் அதிமுக சார்பில் அவரது கணவரின் சகோதரரான தணிகாசலம் போட்டியிடுகிறார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், நேர் எதிர் கட்சிகளில் போட்டியிடும் நிலையில், திருப்போரூர் பேரூராட்சியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அதிக அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் தான், தான் நகராட்சி தலைவராக முடியும் என்பதால், தனது தம்பி மனைவி போட்டியிடும் தொகுதியில் அதிமுகவின் வெற்றி வியூகத்தையும் சேர்த்து கவனிக்க வேண்டிய பொறுப்பு தணிகாசலத்திற்கு ஏற்பட்டுள்ளது.
அதே போல, தனது வெற்றியை பதிவு செய்ய அதிமுக வேட்பாளரை தோற்கடிபக்க மும்முரம் காட்டி வருகிறார் ஏழுமலை. சகோதரர்களின் பிரச்சார யுக்தி யாருக்கு பயனளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தேர்தலில் உறவுகள் மோதுவது, தேர்தல் முடிவை இன்னும் பரபரப்பாக்குகிறது. அதே நேரத்தில் அங்குள்ள சொந்த பந்தங்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு தான் தர்மசங்கடம் ஏற்படுத்துகிறது. யாருக்கு ஓட்டு போடுவது, இவருக்கு போட்டால், அவர் கோபித்துக் கொள்வாரோ, இவர் கோபித்துக் கொள்வாரோ என்கிற தர்மசங்கடம். சிலர், வீட்டில் 6 ஓட்டு இருந்தால், அண்ணனுக்கு இரண்டு, தம்பிக்கு இரண்டு என ஓட்டை பிரித்துக் கொள்வார்கள். ஆனாலும், தேர்தல் முடிவுக்குப் பின், நீங்கள் எனக்கு ஓட்டளிக்கவில்லை, என பரஸ்பர குற்றச்சாட்டுகளும் எழும். அதையும் சமாளிக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்