Local Body Election | ஈபிஎஸ் பரப்புரை செய்து கொண்டிருக்கும் போதே மனுவை வாபஸ் பெற்ற அதிமுக வேட்பாளர்
10வது வார்டில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த விஜி என்பவர் தனது வேட்பு மனுவை வாபஸ்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வேட்புமனு பரிசீலனை கடந்த 5 ஆம் தேதி நடைபெற்றது. 7 ஆம் தேதியான இன்று வேட்புமனு வாபஸ் பெறும் நாள். இதனை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மனுக்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது, மேலும் 3 மணிக்கு மேல் சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணியும், இறுதிவேட்பாளர் பட்டியல் தயார் செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இன்று மாலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்,
இந்தநிலையில் நெல்லை மாநகராட்சி 3வது வார்டில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். திமுக சார்பில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சுப்பிரமணியம் மனு தாக்கல் செய்திருந்தார். இவருக்கு போட்டியாக முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா மற்றும் திமுக வர்த்தக அணி செயலாளராக இருக்கும் மைதீன் மல்கர் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்கள். 3 பேரும் ஒரே வார்டில் திமுக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதோடு 3 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டு இருந்தது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த சூழலில் இன்று வேட்புமனுவை வாபஸ் வாங்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மாலைராஜா மற்றும் மைதீன் மல்கர் ஆகிய இருவரும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர், அப்போது மாலைராஜா கூறும் பொழுது, நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைப்பேன், அதோடு முழுமையாக எனது பங்களிப்பை அளிப்பேன், மேயர், துணை மேயர், 4 மண்டல தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.
இதேநேரம் இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, நகர்ப்புற தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டத்தை நெல்லை கேடிசிநகர் பகுதியில் நடத்தினார். இதேவேளையில் மாநகராட்சியில் 10வது வார்டில் அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த விஜி என்பவர் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். 10வது வார்டில் அவரை எதிர்த்து நிற்கும் திமுகவை சேர்ந்த ரேவதி என்பவரின் கணவர் கட்சியில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் எதிர்த்து போட்டியிட விரும்பாமல் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.