Telangana Election 2023: எகிறும் எதிர்பார்ப்பு - தெலங்கானாவில் பிஆர்எஸ் -காங். - பாஜக மும்முனைப் போட்டி - தேர்தலில் கிங் மேக்கர் ஆகிறாரா ஓவைசி?
தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப்போட்டி நிலவ, அசாதுதுதின் ஓவைசி கிங் மேக்கராக உருவெடுகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பில் இடம்பெற்றுள்ள, தெலங்கானா மாநில தேர்தல் மற்ற மாநிலங்களை விட கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தல்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, 5 மாநில சட்டமன்ற தேர்தல் கருதப்படுகிறது. அதில் இடம்பெற்றுள்ள ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களை காட்டிலும், தெலங்கானா மாநிலம் தான் மிகவும் கவனம் பெற்றுள்ளது. காரணம் அதன் அமைவிடம் தான். தென்னிந்தியாவில் அடுத்த சில வருடங்களில் தேர்தல் நடைபெற உள்ள ஒரே மாநிலம் தெலங்கானா தான். ஏற்கனவே கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பாஜக, தெலங்கானாவில் வென்று தென்னிந்தியாவில் மீண்டும் வலுவாக காலூன்ற முயற்சித்து வருகிறது. ஆனால், ஆட்சியை பிடிப்பது யார் என்பதில் பாரதிய ராஷ்டிரிய சமிதி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவ, அசாதுதின் ஓவைசி கிங் மேக்கராக உருவாகும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில், தெலங்கானாவில் இந்த நான்கு கட்சிகளின் நிலை எப்படி உள்ளது என்பதை சற்றே விரிவாக ஆராயலாம்.
பாரதிய ராஷ்டிரிய சமிதி:
கடந்த 10 ஆண்டுகளாக தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான, பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், அந்த கட்சியின் மீது பொதுமக்களிடையே அதிருப்தி நிலவுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளும் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டு இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சந்திரசேகர ராவின் மகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இடையே, டெல்லி மதுபான ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்னைகள், சந்திரசேகர ராவின் ஆட்சிக்கு ஆபத்தானதாக உள்ளது. மாநிலத்தின் மூத்த குடிமக்கள் பிஆர்எஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்தாலும், தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் வகையில் பெரும்பான்மையாக உள்ள நடுத்தர வயது மற்றும் இளைஞர்கள் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையில் இருப்பதையே கருத்து கணிப்புகள் காட்டுகின்றன. கடந்த இரண்டு தேர்தலின் போதும், மாநிலத்தில் மக்கள் நன்கு அறிந்த தலைவர்கள் என எதிர்க்கட்சியில் யாரும் இல்லை என்பது பிஆர்எஸ்-க்கு சாதகாமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த சூழல் தலைகீழாக மாறி இருப்பது, பிஆர்எஸ் கட்சிக்கு தேர்தலில் வெற்றி என்பது அவ்வளவு எளிதானதாக இருக்காது என்பதை உணர்த்துகிறது. அதேநேரம், வாக்களர்களை கவரும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி போன்ற, பல அதிரடியான நலத்திட்டங்களை சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
மீண்டு வரும் காங்கிரஸ்:
ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதாக, பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை அப்பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினர் வரவேற்றாலும், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதன் விளைவாக தான், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரசால் தெலங்கானாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ஆனால், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை, கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி மற்றும் மாநில தலைவர் ரேவந்தின் மாநிலம் முழுவதுமான சுற்றுப்பயணம் ஆகியவை, காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகம் அளித்துள்ளது. மாவட்ட அளவில் கட்சிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. ஆளுங்கட்சி மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து காங்கிரசுக்கு மாறியிருப்பது அக்கட்சிக்கு மேலும் நம்பிக்கை அளித்துள்ளது. மகளிருக்கு உரிமைத்தொகை, வீட்டு பட்டா, வீட்டுமனை வழங்குவது என, இளைஞர் மற்றும் மகளிரை கவரும் விதமான தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது. இதனால், காங்கிரஸ் கட்சி இந்த முறை தெலங்கானாவில் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பாரதிய ஜனதா கட்சி:
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தெலங்கானா மாநிலத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, பண்டி சஞ்சய் தலைமையில், 2020ம் ஆண்டு நடைபெற்ற ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 150 வார்டுகளில் 48 ஐ வென்றது. தொடர்ந்து, 2020இல் டப்பாக் மற்றும் 2021 இல் ஹுசூராபாத் தொகுதிகளில் நடைபெற்ற இடைதேர்தலில் வெற்றி பெற்று வேகமாக வளர்ச்சி கண்டது. ஆனால் அதன் பிறகு , உட்கட்சி பூசல் மற்றும் கோஷ்டி பூசல்களால் பாஜக தொடர்ந்து தோல்விகளால் துவண்டுள்ளது. பாஜக மீது வட இந்திய கட்சி என்ற பிம்பம் நிலவுவது, அந்த மாநிலத்தில் கட்சிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தென்னிந்தியாவில் கட்சியை வலுப்படுத்த பாஜக பல்வேறு வியூகங்களை வகுப்பதோடு, அதிரடி அறிவிப்புகளையும் வெளிப்படுத்தி வருகிறது. 2014ம் ஆண்டு தேர்தலில் 5 தொகுதிகளை வென்ற பாஜக, 2018ம் ஆண்டு தேர்தலில் வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அசாதுதின் ஓவைசி:
அசாதுதின் ஓவைசி தலைமையிலான AIMIM கட்சி இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஐதராபாத், நிஜாமாபாத் உள்ளிட்ட தொகுதிகளில் இந்த கட்சி பெரும் தொகுதிகளை கைப்பற்றும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதோடு, பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் கிங் மேக்கராக அசாதுதின் ஓவைசி மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவியேற்பார் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் அந்த கட்சி 7 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.