Tamilisai in BJP: கஷ்டமான முடிவு; இஷ்டப்பட்டு எடுத்தேன்- மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை
Tamilisai Soundararajan joined BJP: தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த மருத்துவர் தமிழிசை செளந்தர்ராஜன், மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். அப்போது பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன், இந்நாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை செளந்தர்ராஜன், திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியைத் தழுவினார்.
தெலங்கானா ஆளுநர்
அதைத் தொடர்ந்து தெலங்கானா மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழிசை செளந்தர்ராஜன் நியமிக்கப்பட்டார். அதை அடுத்து, 2021 பிப்ரவரி 21ஆம் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
எனினும் தேர்தல் அரசியலில் ஆர்வம் உள்ளதாக ஏற்கெனவே பல்வேறு தருணங்களில், தமிழிசை தெரிவித்து இருந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் தலைவராக இருந்தவர் தமிழிசை. தமிழக பாஜக தலைவர் ஆகவும் செயல்பட்டுள்ளார். இதையடுத்து தமிழிசை செளந்தர்ராஜன் தென் சென்னை அல்லது தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மீண்டும் பாஜக உறுப்பினர்
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை தனது பதவியை நேற்று முன் தினம் (மார்ச் 18) ராஜினாமா செய்தார். தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு இன்று வந்த அவர், பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அப்போது பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன், இந்நாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் உடனிருந்தனர். மீண்டும் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட தமிழிசை, அதே உறுப்பினர் எண்ணைப் பெற்றுக் கொண்டார்.
கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளார்
நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும்போது, ’’பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் கடினமான முடிவை தமிழிசை எடுத்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழிசை கூறும்போது, ’’ஆளுநர் பதவி ராஜினாமா என்னும் கஷ்டமான முடிவை எடுத்தாலும் இஷ்டப்பட்டு எடுத்திருக்கிறேன். கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்கு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தம்பியிடம் இருந்து, அக்கா என்ற முறையில் அண்ணாமலையிடம் இருந்து பாஜக உறுப்பினர் அட்டையைப் பெற்று இருக்கிறேன்’’ என்று தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த நிகழ்ச்சியில் தமிழிசை எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.