Tamilisai Soundararajan: மக்களவைத் தேர்தலில் எங்கு போட்டி?- தமிழிசை அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட உள்ளதாக தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார். தேர்தல் அரசியலில் ஆர்வம் உள்ளதாக ஏற்கெனவே பல்வேறு தருணங்களில், தமிழிசை தெரிவித்த நிலையில், ஆளுநர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
மாணவர் பருவத்தில் இருந்தே அரசியல் ஆர்வம்
சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் தலைவராக இருந்தவர் தமிழிசை. தமிழக பாஜக தலைவர் ஆகவும் செயல்பட்டுள்ளார். இதற்கிடையே 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை செளந்தர்ராஜன், திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியைத் தழுவினார்.
அதைத் தொடர்ந்து தெலங்கானா மாநில ஆளுநராக 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழிசை செளந்தர்ராஜன் நியமிக்கப்பட்டார். அதை அடுத்து, 2021 பிப்ரவரி 21ஆம் தேதி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
ஆளுநர்களாக 3 தமிழர்கள்
நாடு முழுவதும் தமிழர்கள் 3 பேர் (இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தர்ராஜன்)ஆளுநர்களாகச் செயல்பட்டு வந்த நிலையில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்வதாக தமிழிசை செளந்தர்ராஜன், குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டி இடுவதற்காகவே அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், ’’ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது உண்மைதான். மீண்டும் அரசியலுக்கு வருகிறேன்.
புதுச்சேரி தொகுதியில் போட்டியில்லை
ஆனால் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட மாட்டேன். எந்தத் தொகுதி என்று பாஜக மேலிடம் அறிவிக்கும்’’ என்று தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார்.
எந்தத் தொகுதியில் போட்டி?
தமிழிசை கடந்த முறை போட்டியிட்ட தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.