விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...!
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெருகிறது, விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டத்தில் சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதே போல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணிக்கு மேல் உரிய பாதுகாப்புடன் வந்து வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு 2 கட்டங்களாக இன்று அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் வரும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. மற்றும் இதர 28 மாவட்டங்களில் கடந்த ஜூன் மாத நிலவரப்படி காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் 24,416 பதவிகளுக்கு 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகள் எல்லாம் இம்முறை ஊராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 6ஆம் தேதி மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதில், 6ஆம் தேதி இன்று முதல் கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லுார், வானுார், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 16 மாவட்ட கவுன்சிலருக்கு 95 பேரும், 158 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கு 745 பேரும், 372 கிராம ஊராட்சித் தலைவருக்கு 1,459 பேரும், 2,751 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 8,574 பேரும் என 3,297 பதவியிடங்களுக்கு 10 ஆயிரத்து 873 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான ஓட்டுப்பதிவு 1,569 ஓட்டுச்சாவடி மையங்களில் நடக்கிறது.
முதல் கட்ட தேர்தலில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 919 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 79 ஆயிரத்து 475 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 பேர் ஓட்டு போட உள்ளனர். இத்தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. தேர்தலுக்கான ஓட்டுப்பெட்டிகளும் அந்தந்த வாக்கு சாவடியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
டி.ஐ.ஜி. பாண்டியன் மேற்பார்வையில் எஸ்.பி., ஸ்ரீநாதா தலைமையில் ஓட்டுச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த ஓட்டுச்சாவடிகளான 296 மற்றும் மிகவும் பதற்றமான 62 ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலில், ஊராட்சித் தலைவருக்கு இளஞ்சிவப்பு, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு வெள்ளை நிற வாக்குச்சீட்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு மஞ்சள், ஒன்றிய குழு உறுப்பினருக்கு பச்சை, என 4 வகை வாக்குச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில், ரிஷிவந்தியம், திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. 268 ஒரு வார்டு ஓட்டுச்சாவடிகள், 671 இரு வார்டு ஓட்டுச்சாவடிகள் என மொத்தம் 939 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 603 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 33 ஆயிரத்து 776 பெண் வாக்காளர்கள், 85 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரத்து 568 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர்.
இந்த 4 ஒன்றியங்களில் 10 மாவட்ட கவுன்சிலர்கள், 89 ஒன்றிய கவுன்சிலர்கள், 217 ஊராட்சித் தலைவர்கள், 1,608 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 1,924 பதவியிடங்களில்; 1 மாவட்ட கவுன்சிலர், 14 ஊராட்சித் தலைவர்கள், 208 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 223 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 9 மாவட்ட கவுன்சிலருக்கு 66 பேர், 89 ஒன்றிய கவுன்சிலருக்கு 417 பேர், 203 ஊராட்சித் தலைவருக்கு 782 பேர், 1,400 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 4,452 பேர் என 1,701 பதவியிடங்களுக்கு 5,717 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த 4 ஒன்றியங்களை, 69 மண்டலங்களாக பிரித்து, பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லுதல், தேர்தல் முடிந்ததும் ஓட்டுபெட்டிகளை, ஓட்டு எண்ணும் மையத்திற்கு இன்று இரவே போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பும்பணி மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் 207 மண்டல அலுவலர்கள், 6,304 ஓட்டுச்சாவடி பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 84 ஓட்டுச்சாவடிகளில் வீடியோ பதிவு கண்காணிப்பும், 84 ஓட்டுசாவடிகளில் மத்திய அரசு அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாகவும் நியமிக்கப்பட்டு தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை ஐகோர்ட் மற்றும் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, 774 ஓட்டுச்சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டுள்ளது.