புதுச்சேரியில் ராஜ்யசபா எம்.பி. சீட் யாருக்கு? - என்.ஆர்.காங், பாஜக இடையே இழுபறி
மேலவை எம்.பி. தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமியுடன், அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்து பேசினார், அப்போது பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிக்கும்படி வலியுறுத்தினார்.
புதுச்சேரி மேலவை எம்.பி.யின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய எம்.பி.யை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 22 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். புதுவை மாநிலத்தில் ஆட்சி செய்யும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணிக்கு 16 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மேலும் சுயேச்சைகள் 3 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே இந்த கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
ஆனால் வேட்பாளரை நிறுத்துவதில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மேலவை எம்.பி. தேர்தலில் கூட்டணி கட்சிக்கு பதவியை விட்டுக்கொடுத்த முதல் அமைச்சர் ரங்கசாமி தற்போது அந்த எம்.பி. பதவியை பெற கடும் முனைப்பு காட்டி வருகிறார். ராஜ்யசபா எம்.பி தேர்தில் கூட்டணியில் கருத்துவேறுபாடு ஏற்பாட்டால் ஆட்சிக்கே ஆபத்தாகி விடும் என பாஜக. கருதுகிறது. எனவே பாஜக மேலிட தலைவர்கள், முதல் அமைச்சர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் ஓட்டலில் நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்திற்கான ராஜ்யசபா எம்.பி பதவியை பாஜகவிற்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அத்தீர்மானம் முதலமைச்சர் என்.ரங்கசாமிக்கு வழங்கப்பட்டது. இத்தீர்மானத்தை புன்னகைத்தபடியே பெற்றுக் கொண்ட முதல் அமைச்சர் என்.ரங்கசாமி, பதில் ஏதும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
இந்த நிலையில் பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் திலாஸ்பேட்டையில் உள்ள முதல் அமைச்சர் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரை தனியாக சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் புதுவை மாநிலம் மேலும் வளர்ச்சி பெற மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடைபெற உள்ள மேலவை எம்.பி. தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று ரங்கசாமியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது முதலமைச்சர் ரங்கசாமி இது தொடர்பாக நான் பா.ஜ.க. மேலிடத்தில் பேசி கொள்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.
இது குறித்து அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்ட போது, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தி மேலவை எம்.பி. தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதனை முதலமைச்சர் ரங்கசாமியிடம் கொடுத்தோம். ஆனால் அவர் அதிகாரபூர்வமாக பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் கட்சி தலைமை முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பதில் பெற்று தரும்படி அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் தற்போது முதலமைச்சரை சந்தித்து பேசினோம். அவர் நேரடியாக கட்சி தலைமையிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். என்றார்.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை ஒரே ஒரு மேலவை எம்.பி. பதவி தான் உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் மேலவை எம்.பி.யாக இருந்தால் புதுவைக்கு தனி மாநில அந்தஸ்து உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த பயனுள்ளதாக இருக்கும் என ரங்கசாமி கருதுகிறார். எனவே அவர் இது தொடர்பாக முக்கிய நிர்வாகி மூலமாக பா.ஜ.க. மேலிட தலைவர்களிடம் பேச திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணியில் மேலவை எம்.பி. வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.