(Source: ECI/ABP News/ABP Majha)
Sonia Gandhi: முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வானார் சோனியா காந்தி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ், தி.மு.க. உள்பட நாடு முழுவதும் பா.ஜ.க.வை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி உருவானது.
ராஜ்ய சபா எம்.பி. ஆனார் சோனியா காந்தி:
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி இந்த முறையும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தின் போதுமான அளவு எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் அங்கிருந்து 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் காங்கிரஸ் சார்பில் தேர்வாக உள்ளனர். இதனால், அங்கு ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு சோனியாகாந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் போட்டியின்றி ராஜ்யசபா உறுப்பினராக தேர்வாகியுள்ளதாக ராஜஸ்தான் பேரவை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ள சோனியா காந்தி முதன்முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
5 முறை மக்களவை உறுப்பினர்:
சோனியா காந்தி முதன்முறையாக 1999ம் ஆண்டு மக்களவை உறுப்பினராக அமேதி தொகுதியில் இருந்து தேர்வானார். அதன்பின்பு, அவர் ராபேரெலி தொகுதியில் இருந்து தொடர்ந்து மக்களவைத் தொகுதிக்கு தேர்வானார். 5 முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். சோனியா காந்தி இந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளதால் ரேபரேலி தொகுதியில் போட்டியிடப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வயது முதிர்வு காரணமாக சமீபகாலமாகவே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள சோனியா காந்தி, இந்த முறையும் ராபேரெலி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மாநிலங்களவையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார். மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்ய சபா எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு பெற உள்ளது. இதையடுத்து, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது.
நேரு குடும்பத்தில் இந்திரா காந்திக்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படும் நபர் சோனியா காந்தி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திரா காந்தி 1964 முதல் 1967ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று பரபரப்புரை செய்து வருகின்றனர். கருத்துக்கணிப்புகளும் பா.ஜ.க.விற்கு ஆதரவாகவே இருக்கிறது.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற விடாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் இந்தியா கூட்டணியினர் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா கூட்டணியில் சறுக்கல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதும் அக்கட்சியினருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: Chandigarh Mayor Election: ”பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட சண்டிகர் தேர்தல் அதிகாரி குற்றவாளி”- நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மேலும் படிக்க: Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?