Rahul Gandhi: நெல்லையில் ராகுல்காந்தி பேசியது என்ன? - தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி இதோ
எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன்.
நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்ட மேடையில் ராகுல் காந்தி பேசினார். முன்னதாக தேசத்தின் நாயகன் என்ற காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பாடல் குறுந்தகட்டை ராகுல் காந்தி வெளியிட்டார். கனிமொழி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதனை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டுக்கு ஒவ்வொரு முறை வரும்போது தமிழகத்தை நேசிக்கிறேன். தமிழ்நாட்டு மக்களை நெஞ்சம் நிறைந்த அன்போடு நேசிக்கிறேன். எனக்கு தமிழக மக்களிடம் இருப்பது அரசியல் ரீதியான உறவு அல்ல, அது குடும்ப உறவு. தமிழகத்தின் மக்கள் அவர்களின் பண்பாடு, கலாச்சாரம்,மொழி ஆகியவை என்னை மிகவும் ஈர்த்துள்ளது. எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன்.
தமிழை பேச முடியவில்லை என்றாலும் தமிழின் நூல்களை படித்திருக்கிறேன். இந்தியாவின் கண்ணாடியாக தமிழகத்தை பார்க்கிறேன். சமூக நீதியின் பாதையில் எப்படி நடக்கவேண்டும் என்பதை நாட்டின் மக்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டாக உள்ளது. அதனால் தான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழகத்தில் தொடங்கினேன். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4000 கிமீ நடந்து மாபெரும் தத்துவங்களை தெரிவித்தோம். தமிழ்நாட்டை சாராத மிகப்பெரிய தொழிலதிபர்கள் இந்தியாவில் உள்ள அரசு ஒப்பந்தங்கள் அனைத்தையும் அவர்கள் மட்டுமே பெற்றுக் கொண்டு அனுபவித்து வருகின்றனர். அதானி பிரதமருக்கு நெருக்கமாக இருப்பதால் நாட்டின் அனைத்து விதமான மின்சாரம் தயாரிக்கும் வசதியும் அவரே வைத்து கொண்டுள்ளார். நாட்டில் இருக்கும் சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்தும் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பால் சீரழிந்துள்ளது. நாட்டின் வருவாய், புலனாய்வு துறை, சிபிஐ வருமானவரித்துறை போன்றவைகள் மத்திய அரசின் கையில் எதிரிகளை அழிக்கும் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகிறது. தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மிரட்டப்படுகிறார்கள். தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை கொடுக்க மத்திய அரசு மறுத்துள்ளது. தமிழக மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மோடி நாட்டின் பொருளாதர வசதி மீது முழுமையான ஆக்கிரமப்பை வைத்த்துள்ளார். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் என்கிறார். இந்தியாவின் தாய் ஜனநாயகம் என போற்றப்பட்ட நாள் மாறி ஜனநாயகம் அழியும் நாள் நடந்து வருகிறது.
Chithra Pournami : பக்தர்களே! சித்ரா பௌர்ணமி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு விளக்கம்
இந்தியா கட்சி கூட்டணியும் காங்கிரஸ் கட்சியும் மக்களுக்கு என்ன செய்ய போகிறது என்பதை தெரிவிக்க உள்ளேன். மத்திய அரசிடம் உள்ள 30 லட்சம் காலியான பணியிடங்களையும் இந்தியா கூட்டணி கட்சி அமைத்தவுடன் நிரப்பப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு வேலை கிடைப்பதற்கான பயிற்சிகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆறு முதல் ஒரு வருடம் வரை தனியார் நிறுவனங்களிடம் வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தனி சட்டம் இயற்ற இருக்கிறோம். தகுதி வாய்ந்த இளைஞர் இளம் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைக்கான பயிற்சி வகுப்பு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீட் தேர்வு, தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த பின்னர் மாநில அரசுகள் விரும்பினால் நீட் தேர்வுகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். தமிழக மக்கள் விரும்பும் கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். தேசத்தின் மிகப்பெரிய பணக்காரர்களுக்கு கடன் நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தியாவின் ஏழை விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்ய நாங்கள் விரும்புகிறோம். அதனை செய்யவும் போகிறோம். தேசத்தின் எதிர்காலத்தை தமிழக பெண்களும், இந்தியாவின் பெண்களும் தான் பார்த்துக் கொள்கிறார்கள். அருமையான பணிகளை செய்த பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான உரிமை வழங்கப்படவில்லை. வறுமையின் பிடியின் கீழ் உள்ள பெண்களை தேர்வு செய்து ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்தியாவிலிருந்து வறுமையை நிரந்தரமாக அழிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.
மேலும், “அரசு வேலைவாய்ப்புகளில் 50% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வதுடன் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களிலும் 50 % இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். நாட்டின் பிரதமருக்கு தேசத்தின் மீனவர்கள் நலன் மீது எந்த அக்கறையும் இல்லை. நாட்டின் விவசாயிகளைப் போல் மீனவர்களும் மிக முக்கியமானவர்கள். மீனவர்களுக்கென தனி தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. படகுகளுக்கான மானிய விலையில் டீசல், படகுகளுக்கான காப்பீடு திட்டம் மீனவர்களுக்கான கடன் அட்டை திட்டம் உள்ளிட்டவைகள் கொண்டு வரப்பட உள்ளது. இந்த தேர்தல் கலாச்சாரம், மொழி உள்ளிட்டவைகளை காப்பாற்றுவதற்காக நடத்தும் யுத்தம். இந்த போரில் நாம்தான் வெற்றிப்பெறபோகிறோம். நன்றி வணக்கம்” எனக்கூறி ராகுல் காந்தி பேசி முடித்தார்.