PM Modi Speech: குடும்பக்கட்சி திமுக; அம்மா ஜெயலலிதா; கட்சத்தீவை தாரைவார்த்த காங்கிரஸ்: பொதுக்கூட்டத்தில் போட்டுத்தாக்கிய மோடி
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக என வேலூரில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
பாஜக கூட்டணி வேட்பாளர்கள் ஏ.சி.சண்முகம், சௌமியா அன்புமணி, கே.பாலு ஆகியோரை ஆதரித்து பிரதமர் மோடி வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்... தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்கு வருந்துகிறேன்.
தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரை எதிர்த்தது போல் வேலூர் மண் மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வை நிகழ்த்தப்போகிறது. வேலூரில் நடக்கும் எழுச்சிமிகு கூட்டத்தை டெல்லியில் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக நல்ல இந்தியாவுக்கான அடித்தளத்தை வளர்த்து வைத்துள்ளோம். உலக அளவில் இந்தியா பலமிகு நாடாக உள்ளது. அதில் தமிழகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. சென்னை பெங்களூர் தொழில்துறை வழித்தடம் வேலூர் வழியாகத்தான் செல்கிறது. இதனால் வேலூர் வளர்கிறது. இந்தியா வல்லரசு ஆவதில் தமிழ்நாட்டின் பங்கு மிகப்பெரியதாக இருக்கிறது. வேலூர் மக்களின் எதிர்ப்பார்ப்பை கருத்தில் கொண்டு வேலூரில் விரைவில் விமான நிலையம் நிறுவப்படும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுக பெரும் தடையாக இருக்கிறது. அனைத்திலும் அரசியல் செய்கிறது. திமுக என்பது குடும்ப நிறுவனத்தை போன்றது. தமிழக கலாச்சாரத்திற்கு எதிராக திமுக செயல்படுகிறது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. மூன்று முக்கிய அளவுகோல்கள் - குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழ் கலாச்சார எதிர்ப்பு. ஒட்டுமொத்த திமுகவும் ஒரே ஒரு குடும்பத்தின் சொத்தாக உள்ளது. கொள்ளையடிப்பதிலும் ஊழல் செய்வதிலும் காப்பி ரைட் வைத்துள்ளது திமுக.
குடும்ப அரசியல், ஊழலால் திமுக தமிழகத்தை பின்னோக்கி அழைத்து செல்கிறது. தமிழகத்தை திமுக குடும்பம் கொள்ளை அடிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக. திமுக பழைய சிந்தனையிலேயே இருக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்துள்ளது. அம்மா ஜெயலலிதாவை திமுகவினர் எப்படியெல்லாம் இழிவுபடுத்தினர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பெண்களை திமுக இழிவுபடுத்துகிறது. இந்தியா கூட்டணியினர் பெண்கலை புறக்கணிக்கின்றனர். ஏப்ரல் 19ஆம் தேதி பாஜகவினருக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கானது.” என தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சி:
தொடர்ந்து, தமிழ் வளர்ச்சி குறித்து பேசிய அவர், “ஐக்கிய நாடுகள் சபையில் நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழ் மொழியில் பேச முயற்சிக்கிறேன்... காசியின் எம்.பி.யான நான், காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வசிக்கிறேன். குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ் சங்கத்திற்கு அழைக்கிறேன்.” என்றார்.
கச்சத்தீவு விவகாரம்:
கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய மோடி, “இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு கபட நாடகத்தைப் பற்றி விவாதிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இவர்கள் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுத்தார்கள். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? யாருடைய நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது? காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அதன் பேரில் அந்த தீவு அருகே சென்று தமிழக மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்...அவ்வாறான மீனவர்களை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து கொண்டு வருகிறது.இதுமட்டுமின்றி ஐந்து மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உயிருடன் அழைத்து வந்தேன்.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் மீனவர்களின் குற்றவாளிகள் மட்டுமல்ல, நாட்டின் குற்றவாளிகளும் கூட.” எனத் தெரிவித்தார்.