PM Modi Speech: கட்சிக்காக உழைத்தவர்கள் கொல்லப்பட்டார்கள்: மேடையிலேயே நா தழுதழுத்த மோடி!
PM Modi Speech in Salem: தமிழகத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் பேச்சாக இருக்கிறது.
பாஜகவுக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது என்று பிரதமர் மோடி சேலம் பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த ஆண்டில் ஆறாவது முறையாக நேற்று (மார்ச் 18) தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார். கர்நாடகா மாநிலத்தில் இருந்து கோவை வந்த பிரதமர் மோடி, சாய்பாபா காலனி பகுதிக்குச் சென்று, சாலை பேரணியில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து கோவையிலேயே தங்கிய பிரதமர் மோடி இன்று காலை பாலக்காடு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சேலம் திரும்பினார். திறந்தவெளி வாகனத்தில் வந்து சேலம் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் உடனிருந்தனர்.
திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது
கோட்டை மாரியம்மனுக்கு வணக்கம் என்று சொல்லிப் பேச ஆரம்பித்த பிரதமர் மோடி, ’’தமிழகத்தில் எனக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் பேச்சாக இருக்கிறது. பாஜகவுக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்துவிட்டது. இம்முறை நானூறுக்கும் மேற்பட்ட இடங்களை வெல்வோம்.
இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கும் இந்தியா கூட்டணி
கட்சிக்காக உழைத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். கேதார்நாத்தைப் போன்று தமிழகத்தையும் புண்ணிய பூமியாக மாற்றுவோம். இந்தியா கூட்டணி இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறது. மற்ற மதத்தினரை விமர்சிப்பதில்லை. நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் குறித்து தவறாகப் பேசுகிறார்கள்.
ஏப்ரல் 19 தமிழகத்தில் இருந்துதான் எதிர்க் கட்சிகளுக்கு அழிவு
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் இருந்துதான் எதிர்க் கட்சிகளுக்கு அழிவு தொடங்க இருக்கிறது. இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்கள். பெண்களை விமர்சிப்பவர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி தக்க தண்டனை தாருங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை திமுகவினர் எப்படி விமர்சித்தார்கள் என்று நினைத்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
தமிழ்நாட்டின் சுப்பிரமணிய பாரதியின் வழியில் நானும் பெண் சக்தியை வழிபடுபவன். பெண்களைப் பாதுகாப்போம் என்று இப்போது உறுதி அளிக்கிறேன். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எனது இலக்கு.
திமுகவும் காங்கிரஸும் ஊழல் கட்சிகள்
திமுகவும் காங்கிரஸும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இவை இரண்டும்தான் ஊழலையும் குடும்ப ஆட்சியையும் ஒன்றாகச் செய்கின்றன. திமுகவில் ஒரே குடும்பத்தினரே 5 தலைமுறையாக ஆட்சி செய்கின்றனர்.’’
இவ்வாறு பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் பேசினார்.