Parliament elections 2024: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல் - திமுக, அதிமுக கூட்டணியில் இருப்பது யார்? பாஜகவின் திட்டம் என்ன?
parliament elections 2024: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் எவை எந்தெந்த கூட்டணியில் இருக்கின்றன? இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Parliament Elections 2024: தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, நாடாளுமன்ற தேர்தலை யாருடன் சேர்ந்து எதிர்கொள்ள போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேதி, அடுத்த சில வாரங்களில் அறிவிக்கப்படும் என மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய கட்சிகள் தொடங்கி, மாநில கட்சிகள் வரை அனைத்துமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. சில கட்சிகள் வேட்பாளர்களை கூட அறிவிக்க தொடங்கிவிட்டன. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற கூட்டணி கணக்கு என்ன? யார் யாருடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர் என்ற எதிர்பார்ப்புகளை எகிறி இருக்கிறது
திமுக கூட்டணி:
தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக ஏற்கனவே உள்ள தனது கூட்டணியை நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்கிறது. அதன்படி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தையும் திமுக தொடங்கியுள்ளது. புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக பேசிய திமுக தொகுதிப் பங்கீடு குழு தலைவர் டி.ஆர். பாலு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்காமல் யார் வேண்டுமானாலும் திமுக கூட்டணியில் சேரலாம் என தெரிவித்து உள்ளார். அதேநேரம், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் சேர்ந்து ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக, திராவிடர் கழகம் போன்ற பல முக்கிய அமைப்புகளின் ஆதரவும் திமுகவிற்கு உள்ளது.
அதிமுக கூட்டணி:
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள தமிழ்நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான அதிமுக, புதிய கூட்டணியை கட்டமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இதில் புதிய பாரதம் மற்றும் எஸ்டிபிஐ இருப்பது உறுதியாகிவிட்டது. அதேநேரம், பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக தலைமை அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதுபோக, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஐதராபாத் எம்.பி. ஒவைசி தலைமையிலான மஜ்லிஸ் கட்சியும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளது.
பாஜக கூட்டணி:
நோட்டாவுடன் போட்டி என விமர்சிக்கப்பட்ட பாஜக, அதிமுகவின் ஆதரவு மூலம் தற்போது நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. ஆனால், தற்போது இந்த கூட்டணி முறிந்திருப்பதால், பாஜக தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறது. தற்போது வரை இந்த கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் புதிய நீதிக் கட்சி இருப்பது உறுதியாகியுள்ளது. இதுபோக, கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம், ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியையும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக திட்டமிட்டு வருகிறது. டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியும், பாஜக கூட்டணியில் சேர்ந்து தேர்தலை பாஜக எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக யார் கூட்டணி?
திமுக மற்றும் அதிமுகவை தொடர்ந்து பாமக தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றாக உள்ளது. அதிமுக-பாமக-பாஜக சேர்ந்து தான் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டன. ஆனால், இந்த கூட்டணி தற்போது முறிந்துள்ளதால் பாமக, அதிமுக பக்கம் செல்லுமா அல்லது பாஜக பக்கம் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. திமுக பக்கம் சென்றால் குறைந்த தொகுதிகளே கிடைக்கும் என்பதால், பாஜக கூட்டணியில் இணைந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம் என பாமக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக பக்கம் சாய்கிறதா தேமுதிக?
மதில் மேல் பூனை என்ற பாமகவின் நிலையில்தான் தேமுதிகவும் உள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மறைவால் ஏற்பட்டுள்ள தேமுதிக மீதான அனுதாபத்தை, தங்களுக்கான வாக்குகளாக மாற்ற பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே விரும்புகின்றன. அதேநேரம் பிரேமலதாவோ, அதிமுக கூட்டணிக்கு சென்றால் தேர்தல் செலவை அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என கருதுகிறார். மறுபுறம் பாஜக பக்கம் சென்றால் இணையமைச்சர் பதிவி ஏதேனும் கிடைக்குமே என எதிர்பார்க்கிறார். இதனால், பாஜக மற்றும் அதிமுக என இரு தரப்பிலும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
நாம் தமிழர் கட்சி:
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என அறிவித்து, சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து கூட்டணி விவரங்களுமே தற்போதைய களநிலவரங்கள் மட்டுமே. இந்த கூட்டணி கணக்குகள் எந்த நேரத்திலும் எப்படி வேண்டுமானலும் மாறும் வாய்ப்பும் உள்ளது என்பதே கடந்த கால வரலாறு உணர்த்தும் பாடமாக உள்ளது.
களமிறங்குகிறாரா விஜய்?
இதனிடையே, நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை கட்சியாக பதிவு செய்து நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அவரது தரப்பு போட்டியிட்டால், முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.